Wednesday, August 8, 2007

பார்வைகளும் கேள்விகளும்..

எதிர்பார்ப்புகள் எளிதாகலாம்
ஏமாற்றமும் தரலாம்.
இதய வெள்ளம் போகும் தொலைவு
அளவிட முடியாதது
இயக்கும் எண்ணங்கள் அதிசயமானது.

இயங்கும் உடல் இனிமையானது
இன்பத்தை உணர துடிப்பது
துன்பத்தை உதர துடிக்கிறது.
எதையும் ஒரு அளவில் பார்க்கிறது
எதையும் அளக்கப் பார்க்கிறது.

அளவு குறைவானால் அழுது பார்க்கிறது.
பழுதானால் தொழுது பார்க்கிறது.
இயற்கைக்கு ஊதியம் ஏது?

எண்ணங்களின் எழுச்சி
சொற்களின் தொடர்ச்சி.
சொல்லின் உளி
மனதில் கிலி.
வலியின் வழி
வழியும் குருதி.
வாழ்வின் சறுக்கல்
அதன் மறதி.
மலையும் மடுவாகும்
மணலும் கையிறாகும்
வேண்டும் மனதில் உறுதி

வாழ்வதற்கே பல வாக்கியம்
சொல்லிவிட்டு சென்றார்கள்.
நிலத்தில் உள்ளது
பாலையும் சோலையும்
மேடும் பள்ளமும்,
சிகரங்களும் பள்ளத்தாக்குகளும்
அருவிகளும் ஓடைகளும்
காடுகளும் நகரங்களும்.

கல்லிருக்கும் முள்ளிருக்க்கும்
பாதை நம் கால்கள்
பழக்கப்பட்டதே
சோலைகளும் சொர்கங்களும்
சுகம் காண
நேரம் காலம் கனியப் போகிறதே.

பூச்செடியில் முட்கள் உள்ளது
அது பூவுக்கும் அழகு சேர்கிறது
முள்ளின் வலிமை பூவின் மென்மை
இரண்டும் இருப்பது
ஓர் இடத்தில்
இவை எல்லாம்
இறைவனின் அதிசயப் படைப்பில்
நமக்கு ஒரு பாடம்.

மழலை மனது
பரந்த மனது.
அது பிரபஞ்சத்தின் அளவு
நஞ்சில்லாதது
பிஞ்சு மனது
கறையில்லாதது
குழந்தை மனது

அதுவே முதுமை வரை தொடர்ந்தால்?
துன்பம் என்னும்
துயரம் என்னும்
கூறும் வார்த்தைகள்
நம் மொழியிலிருந்தே
மறைந்து போகும்
மேலவன் கூத்துக்கு
இணையாக நாம்
கூத்து கட்ட முடியுமா?

ஒரு வலியால்தானே
சுகத்தை உணரமுடியும்.
இருவிழியால்தானே
உலகை பார்க்க முடியும்.
பிரபஞ்சத்தின் பேரெழில்
பூமிக்கு வெளியேயும் உள்ளது.

ஒரு எல்லை போட்டு
அடக்க முடியாது
நட்சத்திரக் கூட்டம்
நம்மைப் பார்த்து சிரிக்கிறது.
சிறகில்லாமல் பூமி
வானத்தில் உருள்கிறது.
கைக்குள் அடங்காத நேரத்தை
தனக்குள் அடக்கி சுற்றுகிறது.
நேரம் மறந்து
நில்லாமல் சுற்றுகிறது
சோர்வில்லாமல் சுழல்கிறது.

காலங்களால் அளக்கமுடியாத
வயதானாலும் தினமும் புதிதாக பிறக்கிறது.

இதை திறமை என்பதா?
பொறுமை என்பதா?
வலிமை என்பதா?
முழுமை என்பதா?
பொழுதை பொத்தி வைக்க
பொந்து எங்கே உள்ளது?
வியர்வை இன்றி வலியில்லாமல்
வழிதவறாமல் தொடரும்
பயணம் துவங்கும் ஜனனம்.

வண்ணம் வானில் பூச
நிறம் கிடைக்காமல் திணறுகிறதா?
கருமைதான் கடவுளின் நிறமா?
சூரியனால் இருளை உணர முடியுமா?
பூமியின் காதல் சூரியனிடமா?
ஏன் அதையே சுற்றி வருகிறது?

தன்னை சுற்றும்
நிலவுக்கு பதில்லாமல்
நாணமா? நடுக்கமா?
பூமியே உனது நடுக்கத்திற்கு
மக்களல்லவா
கடுகு போல் சிதறுகிறார்கள்
இது உன் கோபமா? எரிச்சலா?
பச்சை புல்வெளியும்
நீல கடலும் உடுத்தியிருப்பதால்
உனக்கு
உன் அழகின் மேல் கர்வமா?
உன் சுற்றுப் பாதையை
கற்றுதந்தவர் யார்?
விற்பனை இல்லாத
என் கற்பனை கேள்விகளுக்கு
பல் இளிக்காமல் பதில் தருவாயா?
அல்லது
முகம் மறைத்து முக்காடிட்டு
முனகாமல் போவாயா?
உன் உதடுகள் பழகும் மொழியை
எனக்கு கற்றுத் தருவாயா?
உறக்கம் இல்லாமல் உலவும் நீ
உருகும் என்னை மறக்காதே?

எதுவும் தெரியாதது போல் மழுப்பாதே!
நீ உன்னையே சுற்றிக் கொள்ளவும்
நெருப்புத் தலைவனை சுற்றவும்
எங்கிருந்து பெறுகிறாய் சக்தி?
அதன் உத்தியை சொல்ல கூடாதா?

முக்தி அடைய புத்தி வேண்டுமா?
சுகத்தின் பொருள் என்ன?
சுலபத்தில் விடை உண்டா?
சொல்லத்தான் பதில் உண்டா?
சொன்னால்தான் புரிந்திடுமா?
சொல்லினால்தான் விளங்கிடுமா?
விதியை வெல்ல வழி உண்டா?
விதியே வென்றால் பழி உண்டா?
விதியே கதி என்று
சதி செய்யாமல்
நாமே விதியானால் என்ன?
விலகும் தடைகள்
நம் பாதை வழியில் இருந்து.
விடியலை உருவாக்க நமக்குள்
இருக்கும் வெளிச்சத்தை
வெளியில் விட்டு
பிரபஞ்சத்தின் இருள் போக்கலாம்.

No comments:

 
software software