Thursday, August 9, 2007

மனதின் எண்ணங்கள்..

உயிரற்ற ரோமங்கள்
உயர்ந்து உணர்ச்சியில் எழுகிறது.
உதடு துடிக்கிறது
உள்ளக் கொதிப்பின் வெளிப்பாடு
விழியில் வழிகிறது.
கண்ணீரின் சுவை சேர்த்தது யார்?
இது சோகத்தின் சுவையா?
சுகத்தின் சுவையா?
பிரிவை அழிக்க வழி எங்கே?
பசியை ஒழிக்க வழி எங்கே?
பாசம் பொங்க பாவம் ஏது?
சுழலும் வாழ்கை
சுற்றும் பூமி
நிழலும் சிரிக்கும்
நான் ஓர் வரி சொன்னால்.
உழலும் மனதில் ஓர் ஆதங்கம்.
உருவம் இல்லா மனம்
உறங்க துடிக்கும் தினம்.

உளரல் சிதறல்
உருக்கும் குணம்
உருகும் தின்னம்.
மனதை கொடுத்து
மிரளச் செய்தாயா?
மிரண்டு போவேனா?
என்னை என்னுள் தேடி
நான் யார் என்ற கேள்வியை
எனக்கே கேட்டு
விடை காண
மன வீதி எங்கும்
திரிகிறேன்.

அந்த விடையின்
நிறம் என்ன?
சுவை என்ன?
முகம் என்ன?
மொழி என்ன?
தெரியாமல் விழிக்கிறேன்.
தெரிய துடிக்கிறேன்.
விடியுமென்று காத்திருக்கிறேன்.
நம்பிக்கை தோனியிலே
நாளும் என் பயணம் தொடரும்.

வலியை உணர
அனுபவம் வேண்டுமா?
சொன்னால் ஆகாதா?
புரியும்படி சொல்ல கூடாதா?
புதிர் போட்டு விடை தேடுகிறேன்.
நிதம் ஒரு பாடம் கற்கிறேன்.
பயணம் முழுதும் புது முகம்.
பார்கின்றேன்.
காரிருள் காற்று
ஓர் ஒளி தேடுகிறேன்.

நேரம் சேமிக்க
நேரம் ஏது?
பாரம் இல்லாமல்
பயணம் ஏது?
தடையில்லாமல்
தொடரும் பயணம்

விடை தேட
புழுவாக நெளிந்து
பூச்சியாக ஊர்ந்து
பறவை குஞ்சாக
கூட்டில் பிறந்து
பருந்தாக பறந்து
வானின் தூரம் அளந்து
வாழ வந்து வாழ்கிறேன்.
விழியுடன் நாளும் முழிக்கிறேன்.

சிரித்து அழுகிறார்களா?
அழுது சிரிக்கிறார்களா?
உழுது பிழைக்கிறார்களா?
உண்டு பிழைக்கிறார்களா?
உறங்க சொல்கிறார்களா?
உழைக்கச் சொல்கிறார்களா?

இதயம் இனிக்க
உதயமாகும்
என் எண்ணங்கள்.
வாழ்வு சிறக்க
வர்ணம் பூசுகிறேன்.
இந்த வாழ்வில்
போர்களம் இல்லை
அழுகுரல் இல்லை
கொடுந்துயர் இல்லை.
கெடு பகை இல்லை.
சுவைக்க தகுந்த
சுகங்கள் உண்டு.

உண்மை சுரக்கும்
வளம் உண்டு.
அகம் கொண்ட
அன்பு எங்கும் உண்டு.
பரம் பொருள்
காணும் ஞானம் உண்டு.
பூவின் மெல்லிய
இதழ் கொண்ட
மனம் உண்டு.
கருணை என்றும்
காரியத்தில் உண்டு.

அன்பின் வெள்ளம்
தடையில்லா உள்ளம்.
வைகறை பொழுதில்
மலையென வளர்ந்த
மனமெனும் தளிர்
விரிகதிர் போல விரியும்.
நல்ல மாற்றம்
நமக்கு உண்டென்று
மனதிற்கு புரியும்

மனங்களின் எழுத்து
புரியும் போது
மாற்றம் வரும்.
சினங்கள் மறையும்
இணக்கம் ஆகும்.
பிணக்கம் மறந்து போகும்.
சிறுமலர் போல
புன்சிரிப்பு மலரும்.
சிரிப்பின் சக்தி
சிகரங்களை தொட வைக்கும்.

அன்பினால் இயங்கும்
அகிலம் இருக்கும்.
வானம் நம் வசப்படும்.
துவக்கம் தேட
துவங்கும் எண்ணங்கள்.
குறைவில்லா நிறம் கொண்ட
என் சொப்பனங்கள்.
இவை எல்லாம்
இயற்கை நமக்களித்த
அர்பணங்கள்.

தூரம் மறந்த
தொழில் நுட்பங்கள்
துயரம் அறியா
செவி மடல்கள்.
கண்ணீர் அறியா கருவிழிகள்.
மன ஊஞ்சலில் ஆடும்
மகிழ்ச்சியான நேரங்கள்.

உறவுகள் வரவால்
சிறகுகள் விரியும்
உயரம் மறைய
உயரும் நிலை.
மனங்கள் அறியும்
மகிழும் கலை.
மழலை மொழி
புரியும் நிலை.
அமைதியின் விளக்கம்
விளங்கும் நிலை.
அன்பே அமைதி
அகிலம் உனது
என்னும் நிலை.

சொல்லின் சிறையிலே
பொருளின் பிடியிலோ
அடக்கலாகாது.
உணர்வில் வடித்து
உள்ளத்தில் எடுத்து
உள்ளே ஊடுருவும் உண்மை
உயிரில் கலந்த தன்மை.
உயரும் வழி சொல்லும் பெருமை.

No comments:

 
software software