Tuesday, August 14, 2007

கடவுளின் கர்வம் - குழந்தைகள்

ஆசை யாரை விட்டது?
கடவுளின் ஆசை
கருவில் தொடங்கியது
தானே எல்லாம் என இருந்தும்
தன்க்கென்று ஓர் தாய் மடி கேட்கிறான்

நமக்கு புரியாத
மொழியில் பேசும் குழந்தை
அது தேவ மொழி
அங்குள்ள ரகசியத்தை
இங்கு சொல்ல துடிக்கிறது
பாவம் குழந்தைக்கு தெரியாது
அந்த மொழி இங்கு
யாருக்கும் தெரியாதது என்று

இயற்கையின் படைப்பில்
இறைவனின் பரிசு குழந்தைகள்
மழலைச் சொல்லின் ராகம்
மயங்கும் யாவர் நெஞ்சம்
மறக்கும் மனதில் வஞ்சம்
கள்ளம் ஒன்றும் இல்லை
கவலை என்றும் இல்லை
மொட்டுப் போல் உதடு
அது சிரிக்கும் போது
பூக்கும் பூக்கள்
பிஞ்சு விரல்கள்
கொஞ்சும் மொழிகள்

பிறக்கும் குழந்தையின்
மனமும் வெள்ளை
பருகும் பாலும் வெள்ளை
தன் பசியின் சத்தம்
தாயை அழைக்கும்
கோபம் பழிக்கும்
கொண்டவரை மகிழ்விக்கும்
சோகம் மறக்கும்
சொர்க்கம் கிடைக்கும்
சொன்னால் புரியாத
சந்தோஷம் சூழும் வீடெங்கும்

தாய் வலி மறப்பாள்
குழந்தையின் சிரிப்பால்
தெய்வம் தன் உண்மையை
உரைக்கும் குழந்தை உருவில்
மானுடம் தழைக்க வரும்
அரும்புகள் குழந்தைகள்

கொஞ்சுங்கள் அவர்களை
மலையன உணர்ந்த பாரம்
பனியென உருகி ஓடும்
மழலையின் ஒலிக்கு
மயங்காதவர் யார் உளர்?
மனதில் ஈரம் உள்ள
எந்த மானிடரும் சொக்கிப்போவர்
அதன் கீதம் கேட்டு
மொட்டு விரல்கள்
நம் மேல் பட்டால்
எந்த கருங்கல் உள்ளமும்
மெழுகாய் உருகும்
மரத்துப் போன தோலும்
உளுத்துப் போன உடம்பும்
உயிர்பெற்று எழும்

தாயின் வாசம்
தான் அறியும் குழந்தைக்கு
சொந்தம் யார் சொன்னது
தேவ ஆலோசனை
பெற்று வந்ததோ?
தோளில் துள்ளும் கரங்கள்
துயில் கண்டால் உறங்கும் விழிகள்
கையும் காலும் ஆட்டலாம்
கட்டுப்பாடு எதும் இல்லை
துள்ளாத மனமும் துள்ளும்
அள்ளிக் கொஞ்சி செல்லும்
ஆசை கிளற அதுவும் ஓர் காரணம்
எல்லோருக்கும்
கொள்ளை ஆர்வம்
குழந்தைமேல் காரணம்
தானும் எப்போது
சுய நலம் அற்று
கள்ளம் விட்டு
கபடம் கெட்டு
தூய எண்ணம் பட்டு
சோகம் கெட்டு
வாழ்வோம் எப்போது
என்ற ஆதங்கம்

குழந்தை வளர
குறும்பும் வளரும்
கடவுள் அப்படியே நமக்கு
அதை ரசிக்கும் திறனையும்
அருள வேண்டும்
அல்லது குறைந்த பட்ச
பொறுமையையாவது
கொடுக்க வேண்டும்.

குழந்தை சிரிக்கும் போது
கொஞ்சுவதும்
அழும்போது சீறுவதும்
கடவுளும் இப்படி நம்மிடம்
நடக்காமல் இருக்க வோண்டுவதும்
எந்த ஊர் நியாயம்?

முடிந்தவரை நாம் குழந்தைகளுக்கு
அடித்தால் அழும் கலையை
அறிமுகப் படுத்தாமல்
விடுவதே சிறந்தது
நாம் மட்டும் கடவுளிடம்
அழும்போது நம்மை
அரவணைக்க மாட்டாரா
என ஏங்குவதும்
இன்று வரை
எனக்கு விளங்காத விடுகதை
குழந்தைக்கு நாம் மட்டுமே
அறிமுகமான பொருள்
அது அழுதாலும் சிரித்தாலும்
நம்மைதான் நாடும்
அரவணைத்து
அறிவுறுத்தி
ஆளாக்கி ஆண்டவனை ஆராத்திப்போம்
ஆண்டவன் அருள் நிச்சயம் கிட்டும்.

No comments:

 
software software