Tuesday, August 14, 2007

மரம் பா(ட்)டு

வானம் நோக்கி வளர்ந்தேன்
வளம் பெருக்கிக் கிடந்தேன்
சூரிய கதிர் கொத்தி தின்பேன்
அதன் ஒளி விழுங்கி தழைத்தேன்
ஓயாமல் ஓடும் ஜீவன்களுக்கு
ஓய்வென்று ஒதுங்குவது
என் நிழலில்தான்

மனிதக் காற்றை
அதிகம் சுவாசிப்பதால்
நானும் மனிதர்
போல பேசுகிறேனா?
இனி என்னை பற்றி அல்ல
எங்களைப் பற்றி

மனிதரை மனிதர் திட்டிக்கொள்வர்
எங்கள் குல உவமையோடு
'மரம் போல் நிற்கிறாய்' என்று
இன்று வரை புரியாதது என்னவென்றால்
நாங்கள் நின்று கொண்டிருக்கிறோமா?
அல்லது உட்கார்ந்து கொண்டிருக்கிறோமா?
புரியாத புதிர்..!

உலவும் பலருக்கு
அலுக்கும் அவர் பணி
எங்களைப் போல்
ஓர் இடத்தில் இருப்பதாய்
உங்களை நினைத்துப் பார்த்தால்
சிரிப்புதான் வருது

காற்றடித்தால் நாங்கள் அசைவோம்
கனி கனிந்தால் நாங்கள் உதிர்ப்போம்
வேர்கள் கொண்டு வேகம் நீரை உறிஞ்சுவோம்
பச்சை இலை செழிக்க
பருகி பலம் சேர்ப்போம்

தவம் புரிவோரும்
எங்களைப் பாரத்துதான்
தன் உடல் நகர்த்தாமல்
வானவர் நோக்கி பலன் கண்டனர்

எங்கள் தொழில் தவத் தொழில்
பிறருக்கு இன்னா செய்யாமல் உதவும் தொழில்

காய் வேறு
கனி வேறு
களம் வேறு
கிளை வேறு
நிலம் வேறு
நீர் வேறு
நிறம் வேறு
பலம் வேறு
இலை வேறு
சுவை வேறு
நிலை வேறு
ஆனால் குணம் ஒன்றுதான்
மனம் ஒன்றுதான்
நிழல் ஒன்றுதான்
தொழில் ஒன்றுதான்

எங்கள் கிளையில்
பறவைகள் பலவும் உட்காரும்.
ஊரும் உருவங்கள்
எங்கள் சிரமேறும்
ஆனாலும் நாங்கள் நகர்ந்ததில்லை
பழத்தை வைத்து
எங்களை பல பெயர்
வைத்து அழைப்பர்
கூட்டுக் குடும்பமாய்
கூடி இருப்போம் காடுகளாய்

அளவில்லா நெருப்பாலும்
நீராலும் பிளவு ஏற்பட்டாலும்
நாங்கள் மறுபடி முளைப்போம்
ஒன்றாக சிறு சிறு கன்றாக
இயற்கை சீற்றம்
இல்லை ஏமாற்றம்
எங்கள் பலன் அறிந்த மனிதர்
வந்து வெட்டுவதுதான்
எங்கள் மன வருத்தம்
குருதி கொட்டினாலும்
கூக்குரலிட தெரியவில்லை.
பகுதி எடுத்தாலும்
பச்சை மனம் மாறுவதில்லை.
மேனியை தோலுறித்து
நரம்பை நாருறித்து
அடி வேரறுத்து
சென்றாலும் விரும்பி
அரும்புவோம் வேரோர் இடத்தில்.

வானம் பொய்த்து
மேகம் மறுத்தாலும்
சோம்பி சூம்பமாட்டோம்
மழை தூரல் போட்டவுடன்
துளிர் வேலை ஆரம்பிப்போம்
பச்சை வண்ணம் காட்டி
பழுத்தவை பாதம் சேர்த்து
ஊரார் உரம் என அள்ளிச் செல்வர்
எங்கள் உடல் பகுதி
வெட்டினாலும் உங்கள்
உடல் அசதிக்கு உறங்க
வருவது எங்கள் பாதத்தில்தான்.
வெய்யில் பார்த்தவர்
எங்கள் நிழலில் நிற்பர்.

நல்ல வேளை நகரும் வரம்
இறைவன் எங்களுக்கு தரவில்லை.
சொந்த மண் அடையாளமாக
சொல்லாமல் நிற்போம்
என்றும் ஓர் இடத்தில்.

தன் இனத்தவரை
தாங்களே வெட்டிச்
சாய்க்கும் அவலம்
எங்கள் குலத்தில் இல்லை.

பள்ளம் இல்லா உள்ளம்
கொடுத்த இறைவன்
எங்களை நிலம் நிறுத்தி
சிறை செய்தது ஏனோ?
என்ன பிழை செய்தோமோ?

நகரம் படைத்த நீங்கள்
எங்களை நகர்த்தி துரத்திவிட்டீர்கள்.
தொழிற்சாலை தொடங்குவதாக்
தூக்கி விட்டீர்கள்.
அட அதற்காகவாவது எங்களுக்கு
நகரும் சக்தி கொடுத்திருக்கலாம்..!

பூமியின் உயிர் நாங்கள்
மயிர் என நீங்கள் நினைத்தால்
உங்களுக்கு மரை கழண்டு
விட்டதாக நாங்கள் நினைப்போம்

கிளை நீளும் கரங்களாக்
நிழல் தரும் மரங்களாக
மனம் கொண்டு நிற்போம்
வேகாத வெய்யிலில் வெந்து
சூராவளி காற்றில் சூழன்று
கொட்டும் மழையில் நனைந்து
வறண்ட பூமி வெடிப்பு பூமியாக இருந்தும்
கரை புரண்டு
புது வெள்ளம் புகுந்தாலும்
புகழோடு உறுதியாய் நிற்போம் பூமியில்
பூமித்தாயின் நரம்புகளாய்
படர்ந்த எங்கள் வேர்கள்
எங்களை நிறுத்தும் நிலையாக
யாரைத்தேடி நாங்கள் போக?
நச்சுக் காற்றை மாசறுத்து
சுவாசிக்கும் காற்றாய் தருகிறோம்.

உதிர்ந்து முறிந்து
முறித்து நெருப்பு எரிக்க
எடுத்து செல்கிறீர்கள்
எங்கள் தேகங்களை.
வெந்த தேகக் கட்டை கரிகளாய்
சாம்பலாய் சாகும் வரை
உங்களுக்காக இருக்கிறோம்.

நாங்கள் தழைத்தால்
நாடு செழிக்கும்
நாங்கள் உழைத்தால்
நீங்கள் பிழைக்க முடியும்.
கரும் புகையிலிருந்து
நீங்கள் தப்பிக்க சுய நலத்துடன்
ஒரு பொது நல வேண்டுகோள்
எங்களை வாழவிட்டு
நீங்களும் வாழுங்கள்
வளமாக மற்றும் நலமாக.

No comments:

 
software software