Tuesday, August 14, 2007

வலி..

வலிகள் எத்தனையோ வகை. புறவலி அகவலி என இரண்டு உள்ளது. புறவலிகள் வடுவாகி தோற்றத்தை மாற்றி நடந்த சம்பவத்தை நினைவு கூறும். அகவலிகளோ உள்ளத்தில் உறைந்து உளவியல் வினைகளை செய்யும். பொதுவாக இரண்டும் நம் நினைவை சலவை செய்பவை வலியை பார்க்க முடியாது உணரத்தான் முடியும். பிறக்கும் போது நம் அன்னைக்கு தருவது புறவலி. மருந்துடன் மருத்துவர் ஊசியோடு வரும்போது மறைந்து கொள்ளும் குழந்தைகள் அச்சம் கொள்வதும் புறவலியால். குழந்தை புறவலியால் துடித்தால் அன்னை அகவலியால் துடிப்பாள். சில நேரம் வலி வந்தால் வழி பிறக்கும். வலியுடன் வாழ்கை நடத்தும் வறியவர்களுக்கு சில நேரம் வழி பிறக்கும். வாளின் வலியை விட சொல்லின் வலி ஆழமானது. சொல்லில் முள் வைத்து பேசுபவர்களின் பேச்சு செவி வழி நெஞ்சை தைக்கிறது. சில நேரம் வதைக்கிறது. அதுவே பல நேரங்களில் நமக்கு வாழ கற்றுக் கொடுக்கிறது. தலைவலிக்கு மருந்துண்டு மனவலிக்கு மருந்தில்லை. இளவயதில் சிலருக்கு வரும் காதல் வலி சிலருக்கு அவ்வலியே சுகம். நம் பாதையில் முள் குத்தினால் வலி. வலியின் ஓசை வாய் மூலம் வரும். வலியின் வெளிப்பாடு கண் மூலம் வரும். கண்ணீராய் வரும். வலி கற்றுத்தரும் பாடம் அதிகம். வாழ்க்கையில் நாம் காணும் வலிக்கு நாமே விலை நிர்ணைக்கிறோம். அந்த விலையின் ஒரு பகுதிதான் காலம். அந்த வலி நம்மை மட்டும் அல்ல நம்மை சார்ந்தவரையும் சில நேரம் பதம் பார்க்கும். அதனால் நாம் வலுவிழக்காமல் வலிமையடைய வேண்டுமே தவிர வருத்தப் படக்கூடாது. பிணியின் வலி கொடியது. வலி விலக்கு யாருக்கும் நிரந்திரம் அல்ல. வலி அறிந்தவன் வழி அறிவான். வாழ்வறிவான். ஆசை அறுத்து வலியை களைவோம். வலியைத் தாங்க இறைவன் துணையுடன் மன உறுதியும் இருந்தால் வலி வரும் வழி மறக்கும். பிறர் படும் வலி நம்மை தாக்காது பார்த்து கேட்டு அறிந்து நடந்து வாழ்வதே அறிவுடையோர் செயல்.

No comments:

 
software software