பள்ளி போய் வா
படித்து அறிந்து வா
உழைக்க கத்துக்கோ
வரும் உலகம் உனக்குத்தான்.
பிழைக்க தெரிஞ்சிக்கோ
எல்லாரிடமும் பழக தெரிஞ்சிக்கோ
கல்வி என்றும்தான் கற்க வேணுமே
ஆளும் நீயும்தான் வளர வேணுமே
உன் அறிவும் நாளும்தான் சிறக்க வேணுமே
அன்பை பேதமின்றி நீ காட்ட வேணுமே
யாரையும் ஏளனம் எப்பவும் செய்யாதே
நீயும் என்றும் ஏளனப் பொருள் ஆகாதே
முயற்சியுடன் எந்த காரியமும் முனைந்து செய்யனும்
தளர்ச்சி இல்லாம அதையும் பார்த்து செய்யனும்
இளம் காலையில் கண் முழிச்சிடு.
இந்த நாளும் நமதே என்று நீ நினைச்சிடு
பல்லை நீயே துலக்கிடு
பாலை நீயும் குடிச்சிடு
காலை கடனை முடித்திடு
கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செஞ்சிடு
குளித்து நீயும் வந்திடு
கடவுளை நாளும் கும்பிடு
தினமும் நீயும் நினைச்சிடு
அம்மா செய்த சிற்றுண்டி
அழகாய் நீயும் சாப்பிடு
பள்ளீச் சீருடை போட்டுக்கோ
பையை தோளில் மாட்டிக்கோ
தாத்தா பாட்டிக்கு
டாடா பைபை சொல்லிக்கோ
அம்மா கையை புடிச்சிக்கோ
பள்ளிச் சாலை நோக்கி நடந்துக்கோ
ஆசான் வகுப்புக்கு வருவாரு
பாடம் சொல்லி தருவாரு
பயமில்லாம கத்துக்கோ
பக்குவமாய் பார்த்து தெரிஞ்சுக்கோ
புரியாததை கேட்டுக்கோ
புரியாதவர்க்கு உதவிடு
புதுமை நீயும் புரிந்திடு
மதியம் உணவு சாப்பிடு
தண்ணீர் நீயும் குடிச்சிடு
மாலை வீடு திரும்பிடு
உடையை நீயும் மாற்றிடு
கைகால் கழுவிடு
பெரியவங்க சொல்றதை கேட்டிடு
ஓடி ஆடி விளையாடு
உட்கார்ந்து மட்டும் இருக்காதே
இருட்டும் முன் வீட்டில் இருந்திடு
வீட்டுப் பாடம் முடித்திடு
இரவு உணவை உண்டிடு
கடவுளுக்கு நன்றி சொல்லிடு
கட்டிலில் படுத்து உறங்கிடு
பள்ளி போட்டிகளில் பங்கெடுத்துக்கோ
நண்பன் பரிசு வாங்கினா கை குலுக்கிக்கோ
நீ பரிசு வாங்க கை கோர்த்துக்கோ
நெஞ்சில் துணிவு வைத்திடு
நேசமாய் பழக கற்றிடு
பன்மொழி பாலனாய் மாறிடு
உன் தாய் மொழி என்றும் நினைத்திடு.
தெய்வம் பல உண்டு நாட்டிலே
எல்லாம் ஒன்று என தெரிஞ்சிக்கோ
மதங்கள் சில இருந்தாலும்
மனித நேயம் என்றும் மறக்காதே
உன் புன்னகையால்
இவ்வுலகை வென்றிடு
நல்ல முன் உதாரணமாய் இருந்திடு
முயன்று முன்னால் சென்றிடு
தோல்வி என்று துவளாதே
வெற்றி களிப்பில் குதிக்காதே
இரண்டும் சமமாய் ஏற்றிடு
வாழ்வில் சாதனை செஞ்சிடு
உலகம் உனது பாக்கெட்டிலே
நாமும் போகலாம் ராக்கெட்டிலே
அன்பு அறிவு
பணிவு துணிவு
தெளிவு பொலிவு
ஆக்கம் ஊக்கம்
உண்மை மென்மை
முயற்சி உயர்ச்சி
எல்லாம் உனக்கு
என்றும் கடவுள் அருள்வாரே.
Wednesday, August 22, 2007
நம் குழந்தைகளுக்கு..
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Wednesday, August 22, 2007
Labels: கவிதை, குழந்தைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment