Wednesday, August 22, 2007

நம் குழந்தைகளுக்கு..

பள்ளி போய் வா
படித்து அறிந்து வா
உழைக்க கத்துக்கோ
வரும் உலகம் உனக்குத்தான்.
பிழைக்க தெரிஞ்சிக்கோ
எல்லாரிடமும் பழக தெரிஞ்சிக்கோ

கல்வி என்றும்தான் கற்க வேணுமே
ஆளும் நீயும்தான் வளர வேணுமே
உன் அறிவும் நாளும்தான் சிறக்க வேணுமே
அன்பை பேதமின்றி நீ காட்ட வேணுமே

யாரையும் ஏளனம் எப்பவும் செய்யாதே
நீயும் என்றும் ஏளனப் பொருள் ஆகாதே
முயற்சியுடன் எந்த காரியமும் முனைந்து செய்யனும்
தளர்ச்சி இல்லாம அதையும் பார்த்து செய்யனும்

இளம் காலையில் கண் முழிச்சிடு.
இந்த நாளும் நமதே என்று நீ நினைச்சிடு
பல்லை நீயே துலக்கிடு
பாலை நீயும் குடிச்சிடு
காலை கடனை முடித்திடு
கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செஞ்சிடு
குளித்து நீயும் வந்திடு
கடவுளை நாளும் கும்பிடு
தினமும் நீயும் நினைச்சிடு

அம்மா செய்த சிற்றுண்டி
அழகாய் நீயும் சாப்பிடு
பள்ளீச் சீருடை போட்டுக்கோ
பையை தோளில் மாட்டிக்கோ
தாத்தா பாட்டிக்கு
டாடா பைபை சொல்லிக்கோ
அம்மா கையை புடிச்சிக்கோ
பள்ளிச் சாலை நோக்கி நடந்துக்கோ
ஆசான் வகுப்புக்கு வருவாரு
பாடம் சொல்லி தருவாரு

பயமில்லாம கத்துக்கோ
பக்குவமாய் பார்த்து தெரிஞ்சுக்கோ
புரியாததை கேட்டுக்கோ
புரியாதவர்க்கு உதவிடு
புதுமை நீயும் புரிந்திடு
மதியம் உணவு சாப்பிடு
தண்ணீர் நீயும் குடிச்சிடு
மாலை வீடு திரும்பிடு
உடையை நீயும் மாற்றிடு
கைகால் கழுவிடு

பெரியவங்க சொல்றதை கேட்டிடு
ஓடி ஆடி விளையாடு
உட்கார்ந்து மட்டும் இருக்காதே
இருட்டும் முன் வீட்டில் இருந்திடு
வீட்டுப் பாடம் முடித்திடு
இரவு உணவை உண்டிடு
கடவுளுக்கு நன்றி சொல்லிடு
கட்டிலில் படுத்து உறங்கிடு

பள்ளி போட்டிகளில் பங்கெடுத்துக்கோ
நண்பன் பரிசு வாங்கினா கை குலுக்கிக்கோ
நீ பரிசு வாங்க கை கோர்த்துக்கோ
நெஞ்சில் துணிவு வைத்திடு
நேசமாய் பழக கற்றிடு
பன்மொழி பாலனாய் மாறிடு
உன் தாய் மொழி என்றும் நினைத்திடு.

தெய்வம் பல உண்டு நாட்டிலே
எல்லாம் ஒன்று என தெரிஞ்சிக்கோ
மதங்கள் சில இருந்தாலும்
மனித நேயம் என்றும் மறக்காதே

உன் புன்னகையால்
இவ்வுலகை வென்றிடு
நல்ல முன் உதாரணமாய் இருந்திடு
முயன்று முன்னால் சென்றிடு
தோல்வி என்று துவளாதே
வெற்றி களிப்பில் குதிக்காதே
இரண்டும் சமமாய் ஏற்றிடு
வாழ்வில் சாதனை செஞ்சிடு
உலகம் உனது பாக்கெட்டிலே
நாமும் போகலாம் ராக்கெட்டிலே

அன்பு அறிவு
பணிவு துணிவு
தெளிவு பொலிவு
ஆக்கம் ஊக்கம்
உண்மை மென்மை
முயற்சி உயர்ச்சி
எல்லாம் உனக்கு
என்றும் கடவுள் அருள்வாரே.

கண்ணதாசன் கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!


இந்த கவிதை இன்னொரு வலைப்பதிவிலிருந்து 'சுட்டது'.
இந்த கவிதையில் உள்ளது எல்லாம் உண்மை வரிகள் என்று எனக்கு பட்டது.

Wednesday, August 15, 2007

பாரதத் தாய்

பாதம் பணிந்தவர் பயனுற்றனர்
வாதம் செய்தவர் பிரிவுற்றனர்.
பாவம் என்றெண்ணியவர் பிரம்மிப்படைந்தனர்
கோபம் கொண்டவர் மோசம் போயினர்.

விலங்கு கைகளை இறுக்க
உரிமை அதனை உடைக்க
கொட்டும் குருதியில் குளித்து
வாழும் உயிர்களை ஏப்பம் விட்டு
வாங்கிய சுதந்திரம்
வாழ்கை என்றும் மறவாது
உன் மந்திரம்

சுரண்டும் சுப்பன்கள்
சுகமாய் இருந்தாலும்
சுரக்கும் உன் கருணை
சுத்தமானதுதான்.

எத்தனை உறிஞ்சினாலும்
ஊரும் நீரூற்று உந்தனுடையது
ஜாதி நோய் கொண்டு
பாதி உயிர் போயினும்
சாதித்து நின்றாய் நீ
கொலை வெறி தீவிரவாதியும்
உன்னை கீரி கொப்பளிக்கும்
ரத்தம் கண்டு குதூகலித்தாலும்
குணத்துடன் உன் சோகம் மறைத்தாய்
கூடி நின்று அமைதி காத்தாய்

ஒன்றாய் இருப்பதை கண்டு
மனம் வேகும் மாந்தர் தம்மை
வேரோடு மாற்றுவோம்.
இவள் ஒன்று பட்ட
சக்தியை கூட்டுவோம்.

மனித வளத்தின்
மகிமையை
அவனி அறிய
வைத்தாய் நீ
வானம் வளர
வாழ வைத்தாய் நீ
மானம் ஊட்டி
கானம் பாடி
நாளும் நன்மை செய்து
வாழும் மனிதரை கொண்டாய் நீ.

அறிவியல் அதிசயமும்
புவியியல் பூகம்பமும்
நடப்பது உன்னில்தான்.
ஆழிப்பேரலையும் உன்னை
தோழி போல் முத்தமிட்டு
பல உயிர்களை
புசித்து ருசித்தது
உன்னிடத்தில்.

யாருக்கும் இல்லை
என்று சொல்லும்
மனம் இல்லாமல்
அனைவருக்கும்
கிள்ளி கொடுக்காமல்
அள்ளி கொடுப்பவள் நீ
அதையும் சொல்லி
கொடுப்பவள் நீ.
விதையை விருட்சம்
ஆக்குபவளும் நீயே.

தவசீலர்கள் உன்னில் ஜெனித்து
சமுதாய மாற்றம் கண்டு
உள்ள ஏற்றம் கொண்டு
வாழ்வாங்கு வாழ வாழ்த்துவாய்
நீயும் வாழுவாய்.

நிலம் கொண்டு
நீர் கொண்டு
வளம் கொண்டு
பயிர் கொண்டு
வனம் கொண்டு
மனம் கொண்டு
குணம் கொண்டு
செல்வம் கொண்டு
எழில் கொண்ட
எங்கள் தாயே
எங்களை வாழ வைத்தாயே
எங்களை இந்தியர்
என்று சொல்லி
பெருமை பட வைத்தாயே
உன் அடி பணிந்து
உயருவோம் என்றும்.

Tuesday, August 14, 2007

பிறந்த ராசிக்கு ராசியான ஸ்தலம் எது?

நாம் எத்தனையோ கோவில்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறோம். என்றாலும் கூட நமது ராசிக்கு ஏற்ற ஸ்தலம் எது என தெரிந்து கொண்டு அதற்கேற்ப வழிபட்டு வருவோமானால் நம் வாழ்வு இன்னும் சிறப்பாக அமையும்.


இதோ ஒவ்வொரு ராசிக்காரர்களும் செல்ல வேண்டிய ஸ்தலங்களின் விபரம் பின்வருமாறு:

ராசி - ஸ்தலம்

மேஷம் - ராமேஸ்வரம் ராமநாதர்
ரிஷபம் - மேல் திருப்பதி வெஙகடேச பெருமாள்
மிதுனம் - திருவெண்காட்டில் புதன் சன்னதி
கடகம் - சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாம சுந்தரி சன்னதி எதிரே உள்ள நவலிங்கம்
சிம்மம் - நன்னிலம் அருகில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் உள்ள மங்களாம்பிகை
கன்னி - திருக்கழுக்குன்றம் மலை மேல் வேதகிரீஸ்வரர்
துலாம் - திருத்தணி முருகன்
விருச்சிகம் - காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை பவுர்ணமியில் வழிபடுதல்
தனுசு - ராமநாதபுரம் அருகில் தேவிபட்டணத்தில் கடலில் உள்ள நவக்கிரகம்(நவபாஷாணம்)
மகரம் - காசியில் உள்ள விஸ்வநாதர்
கும்பம் - கும்பகோணத்தில் கும்பேஸ்வரர்
மீனம் - மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள சொக்கநாதர் மற்றும் மீனாட்சி.

குறிப்பு:-
நம்மக்கு தெரிஞ்சத சொல்லிட்டேன்.. அதுக்காக என் ராசிக்கேத்த சாமி இங்க இல்லன்னு கோவிலுக்கு போய் கும்பிடாம வந்துடாதீங்க..

தனிமை..

தனிமை .. ஒரு வரம், ஒரு சாபம், ஒரு கொடுமை, ஒரு மென்மை, ஒரு இனிமை, ஒரு குற்றம், ஒரு திறமை, ஒரு தவம், ஒரு மேன்மை, ஒரு வறுமை, ஒரு செயல், ஒரு உண்மை, ஒரு கவிதை, ஒரு அருள், ஒரு ஆற்றல், ஒரு பாடல், ஒரு ஒழுக்கம், ஒரு அனுபவம், ஒரு ராகம், ஒரு குடும்பம். தனிமையில் இனிமை காண்பது அவரவர் மனதிலு வாழ்கையிலும்தான் அடங்கியுள்ளது. பலர் இந்த உலகில் தனிமைக்கு ஏங்குகிறார்கள் - அது சாபம். சிலருக்கு அது கிட்டுகிறது - அது வரம், ஆண்டவன் அருள். சிலருக்கு அதுவே ஒரு கொடுமை. சிலர் அதை ஒரு தவமாகவே செய்கின்றனர். அது அவர் செயல் ஒழுக்கத்தை உரசிப் பார்க்கும் ஓர் உரைகல். நண்பர்கள். பகைவர்கள், உறவினர், சுற்றத்தார் யாரும் இல்லா ஒரு வறுமை சூழலை ஏற்படுத்தும் தனிமை. தனிமையை ஒரு கவிதையாக்கி, ராகமாக்கி, பாடலாக்கி பாடுபவர்களும் உண்டு. அதுவே அவர்களின் ஆற்றல். ஒரு குடும்பம் தனிமை படுத்தப்பட்டால் அது ஒரு குற்றம். அது அவர்களுக்கு விதித்த அல்லது அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒரு செயல். தனிமை நமக்கு நாமே பேசக் கற்று கொடுக்கிறது. ஆண்டவனிடன் நெருக்கமாக பேச செய்கிறது. நம்மை நமக்கு அடையாளம் காட்டுவது தனிமை. தனிமை ஒரு மென்மையான அனுபவம். அதை ரசிக்க ருசிக்க கற்றுக் கொள்வது கொஞ்சம் கடினமே. கவிஞன் கவிதை வடிப்பதும் தனிமையில்தான். கட்டுரையாளன் கட்டுரை வரைவதும் தனிமையில்தான் ஓவியன் வண்ணம் தீட்டுவதும் தனிமையில்தான். இன்றைய உலகச் சூழலில் தனிமை ஓர் அருமருந்து. அதை உணவாக்க முடியாது. நம் வாழ்வை மேன்மை பெற தனிமையில் நம்மை ஊக்க படுத்திக் கொள்ளலாம். உடல் மற்றும் மன ரீதியாக பல மற்றங்களை கொண்டு வரும் தனிமை. மனம் விட்டு மற்றவறோடு பேசும்போது தனிமையை தனிமை படுத்துகிறோம். தனிமையிலேயே உழலாமல் தனித்தன்மையோடு வாழ்வின் வளமையை உணர்ந்து உலகை வென்று உன்னதம் காண்போம் இறைவன் துணையுடன் நம் உள்ளத்துணிவுடன்.

வலி..

வலிகள் எத்தனையோ வகை. புறவலி அகவலி என இரண்டு உள்ளது. புறவலிகள் வடுவாகி தோற்றத்தை மாற்றி நடந்த சம்பவத்தை நினைவு கூறும். அகவலிகளோ உள்ளத்தில் உறைந்து உளவியல் வினைகளை செய்யும். பொதுவாக இரண்டும் நம் நினைவை சலவை செய்பவை வலியை பார்க்க முடியாது உணரத்தான் முடியும். பிறக்கும் போது நம் அன்னைக்கு தருவது புறவலி. மருந்துடன் மருத்துவர் ஊசியோடு வரும்போது மறைந்து கொள்ளும் குழந்தைகள் அச்சம் கொள்வதும் புறவலியால். குழந்தை புறவலியால் துடித்தால் அன்னை அகவலியால் துடிப்பாள். சில நேரம் வலி வந்தால் வழி பிறக்கும். வலியுடன் வாழ்கை நடத்தும் வறியவர்களுக்கு சில நேரம் வழி பிறக்கும். வாளின் வலியை விட சொல்லின் வலி ஆழமானது. சொல்லில் முள் வைத்து பேசுபவர்களின் பேச்சு செவி வழி நெஞ்சை தைக்கிறது. சில நேரம் வதைக்கிறது. அதுவே பல நேரங்களில் நமக்கு வாழ கற்றுக் கொடுக்கிறது. தலைவலிக்கு மருந்துண்டு மனவலிக்கு மருந்தில்லை. இளவயதில் சிலருக்கு வரும் காதல் வலி சிலருக்கு அவ்வலியே சுகம். நம் பாதையில் முள் குத்தினால் வலி. வலியின் ஓசை வாய் மூலம் வரும். வலியின் வெளிப்பாடு கண் மூலம் வரும். கண்ணீராய் வரும். வலி கற்றுத்தரும் பாடம் அதிகம். வாழ்க்கையில் நாம் காணும் வலிக்கு நாமே விலை நிர்ணைக்கிறோம். அந்த விலையின் ஒரு பகுதிதான் காலம். அந்த வலி நம்மை மட்டும் அல்ல நம்மை சார்ந்தவரையும் சில நேரம் பதம் பார்க்கும். அதனால் நாம் வலுவிழக்காமல் வலிமையடைய வேண்டுமே தவிர வருத்தப் படக்கூடாது. பிணியின் வலி கொடியது. வலி விலக்கு யாருக்கும் நிரந்திரம் அல்ல. வலி அறிந்தவன் வழி அறிவான். வாழ்வறிவான். ஆசை அறுத்து வலியை களைவோம். வலியைத் தாங்க இறைவன் துணையுடன் மன உறுதியும் இருந்தால் வலி வரும் வழி மறக்கும். பிறர் படும் வலி நம்மை தாக்காது பார்த்து கேட்டு அறிந்து நடந்து வாழ்வதே அறிவுடையோர் செயல்.

மரம் பா(ட்)டு

வானம் நோக்கி வளர்ந்தேன்
வளம் பெருக்கிக் கிடந்தேன்
சூரிய கதிர் கொத்தி தின்பேன்
அதன் ஒளி விழுங்கி தழைத்தேன்
ஓயாமல் ஓடும் ஜீவன்களுக்கு
ஓய்வென்று ஒதுங்குவது
என் நிழலில்தான்

மனிதக் காற்றை
அதிகம் சுவாசிப்பதால்
நானும் மனிதர்
போல பேசுகிறேனா?
இனி என்னை பற்றி அல்ல
எங்களைப் பற்றி

மனிதரை மனிதர் திட்டிக்கொள்வர்
எங்கள் குல உவமையோடு
'மரம் போல் நிற்கிறாய்' என்று
இன்று வரை புரியாதது என்னவென்றால்
நாங்கள் நின்று கொண்டிருக்கிறோமா?
அல்லது உட்கார்ந்து கொண்டிருக்கிறோமா?
புரியாத புதிர்..!

உலவும் பலருக்கு
அலுக்கும் அவர் பணி
எங்களைப் போல்
ஓர் இடத்தில் இருப்பதாய்
உங்களை நினைத்துப் பார்த்தால்
சிரிப்புதான் வருது

காற்றடித்தால் நாங்கள் அசைவோம்
கனி கனிந்தால் நாங்கள் உதிர்ப்போம்
வேர்கள் கொண்டு வேகம் நீரை உறிஞ்சுவோம்
பச்சை இலை செழிக்க
பருகி பலம் சேர்ப்போம்

தவம் புரிவோரும்
எங்களைப் பாரத்துதான்
தன் உடல் நகர்த்தாமல்
வானவர் நோக்கி பலன் கண்டனர்

எங்கள் தொழில் தவத் தொழில்
பிறருக்கு இன்னா செய்யாமல் உதவும் தொழில்

காய் வேறு
கனி வேறு
களம் வேறு
கிளை வேறு
நிலம் வேறு
நீர் வேறு
நிறம் வேறு
பலம் வேறு
இலை வேறு
சுவை வேறு
நிலை வேறு
ஆனால் குணம் ஒன்றுதான்
மனம் ஒன்றுதான்
நிழல் ஒன்றுதான்
தொழில் ஒன்றுதான்

எங்கள் கிளையில்
பறவைகள் பலவும் உட்காரும்.
ஊரும் உருவங்கள்
எங்கள் சிரமேறும்
ஆனாலும் நாங்கள் நகர்ந்ததில்லை
பழத்தை வைத்து
எங்களை பல பெயர்
வைத்து அழைப்பர்
கூட்டுக் குடும்பமாய்
கூடி இருப்போம் காடுகளாய்

அளவில்லா நெருப்பாலும்
நீராலும் பிளவு ஏற்பட்டாலும்
நாங்கள் மறுபடி முளைப்போம்
ஒன்றாக சிறு சிறு கன்றாக
இயற்கை சீற்றம்
இல்லை ஏமாற்றம்
எங்கள் பலன் அறிந்த மனிதர்
வந்து வெட்டுவதுதான்
எங்கள் மன வருத்தம்
குருதி கொட்டினாலும்
கூக்குரலிட தெரியவில்லை.
பகுதி எடுத்தாலும்
பச்சை மனம் மாறுவதில்லை.
மேனியை தோலுறித்து
நரம்பை நாருறித்து
அடி வேரறுத்து
சென்றாலும் விரும்பி
அரும்புவோம் வேரோர் இடத்தில்.

வானம் பொய்த்து
மேகம் மறுத்தாலும்
சோம்பி சூம்பமாட்டோம்
மழை தூரல் போட்டவுடன்
துளிர் வேலை ஆரம்பிப்போம்
பச்சை வண்ணம் காட்டி
பழுத்தவை பாதம் சேர்த்து
ஊரார் உரம் என அள்ளிச் செல்வர்
எங்கள் உடல் பகுதி
வெட்டினாலும் உங்கள்
உடல் அசதிக்கு உறங்க
வருவது எங்கள் பாதத்தில்தான்.
வெய்யில் பார்த்தவர்
எங்கள் நிழலில் நிற்பர்.

நல்ல வேளை நகரும் வரம்
இறைவன் எங்களுக்கு தரவில்லை.
சொந்த மண் அடையாளமாக
சொல்லாமல் நிற்போம்
என்றும் ஓர் இடத்தில்.

தன் இனத்தவரை
தாங்களே வெட்டிச்
சாய்க்கும் அவலம்
எங்கள் குலத்தில் இல்லை.

பள்ளம் இல்லா உள்ளம்
கொடுத்த இறைவன்
எங்களை நிலம் நிறுத்தி
சிறை செய்தது ஏனோ?
என்ன பிழை செய்தோமோ?

நகரம் படைத்த நீங்கள்
எங்களை நகர்த்தி துரத்திவிட்டீர்கள்.
தொழிற்சாலை தொடங்குவதாக்
தூக்கி விட்டீர்கள்.
அட அதற்காகவாவது எங்களுக்கு
நகரும் சக்தி கொடுத்திருக்கலாம்..!

பூமியின் உயிர் நாங்கள்
மயிர் என நீங்கள் நினைத்தால்
உங்களுக்கு மரை கழண்டு
விட்டதாக நாங்கள் நினைப்போம்

கிளை நீளும் கரங்களாக்
நிழல் தரும் மரங்களாக
மனம் கொண்டு நிற்போம்
வேகாத வெய்யிலில் வெந்து
சூராவளி காற்றில் சூழன்று
கொட்டும் மழையில் நனைந்து
வறண்ட பூமி வெடிப்பு பூமியாக இருந்தும்
கரை புரண்டு
புது வெள்ளம் புகுந்தாலும்
புகழோடு உறுதியாய் நிற்போம் பூமியில்
பூமித்தாயின் நரம்புகளாய்
படர்ந்த எங்கள் வேர்கள்
எங்களை நிறுத்தும் நிலையாக
யாரைத்தேடி நாங்கள் போக?
நச்சுக் காற்றை மாசறுத்து
சுவாசிக்கும் காற்றாய் தருகிறோம்.

உதிர்ந்து முறிந்து
முறித்து நெருப்பு எரிக்க
எடுத்து செல்கிறீர்கள்
எங்கள் தேகங்களை.
வெந்த தேகக் கட்டை கரிகளாய்
சாம்பலாய் சாகும் வரை
உங்களுக்காக இருக்கிறோம்.

நாங்கள் தழைத்தால்
நாடு செழிக்கும்
நாங்கள் உழைத்தால்
நீங்கள் பிழைக்க முடியும்.
கரும் புகையிலிருந்து
நீங்கள் தப்பிக்க சுய நலத்துடன்
ஒரு பொது நல வேண்டுகோள்
எங்களை வாழவிட்டு
நீங்களும் வாழுங்கள்
வளமாக மற்றும் நலமாக.

கடவுளின் கர்வம் - குழந்தைகள்

ஆசை யாரை விட்டது?
கடவுளின் ஆசை
கருவில் தொடங்கியது
தானே எல்லாம் என இருந்தும்
தன்க்கென்று ஓர் தாய் மடி கேட்கிறான்

நமக்கு புரியாத
மொழியில் பேசும் குழந்தை
அது தேவ மொழி
அங்குள்ள ரகசியத்தை
இங்கு சொல்ல துடிக்கிறது
பாவம் குழந்தைக்கு தெரியாது
அந்த மொழி இங்கு
யாருக்கும் தெரியாதது என்று

இயற்கையின் படைப்பில்
இறைவனின் பரிசு குழந்தைகள்
மழலைச் சொல்லின் ராகம்
மயங்கும் யாவர் நெஞ்சம்
மறக்கும் மனதில் வஞ்சம்
கள்ளம் ஒன்றும் இல்லை
கவலை என்றும் இல்லை
மொட்டுப் போல் உதடு
அது சிரிக்கும் போது
பூக்கும் பூக்கள்
பிஞ்சு விரல்கள்
கொஞ்சும் மொழிகள்

பிறக்கும் குழந்தையின்
மனமும் வெள்ளை
பருகும் பாலும் வெள்ளை
தன் பசியின் சத்தம்
தாயை அழைக்கும்
கோபம் பழிக்கும்
கொண்டவரை மகிழ்விக்கும்
சோகம் மறக்கும்
சொர்க்கம் கிடைக்கும்
சொன்னால் புரியாத
சந்தோஷம் சூழும் வீடெங்கும்

தாய் வலி மறப்பாள்
குழந்தையின் சிரிப்பால்
தெய்வம் தன் உண்மையை
உரைக்கும் குழந்தை உருவில்
மானுடம் தழைக்க வரும்
அரும்புகள் குழந்தைகள்

கொஞ்சுங்கள் அவர்களை
மலையன உணர்ந்த பாரம்
பனியென உருகி ஓடும்
மழலையின் ஒலிக்கு
மயங்காதவர் யார் உளர்?
மனதில் ஈரம் உள்ள
எந்த மானிடரும் சொக்கிப்போவர்
அதன் கீதம் கேட்டு
மொட்டு விரல்கள்
நம் மேல் பட்டால்
எந்த கருங்கல் உள்ளமும்
மெழுகாய் உருகும்
மரத்துப் போன தோலும்
உளுத்துப் போன உடம்பும்
உயிர்பெற்று எழும்

தாயின் வாசம்
தான் அறியும் குழந்தைக்கு
சொந்தம் யார் சொன்னது
தேவ ஆலோசனை
பெற்று வந்ததோ?
தோளில் துள்ளும் கரங்கள்
துயில் கண்டால் உறங்கும் விழிகள்
கையும் காலும் ஆட்டலாம்
கட்டுப்பாடு எதும் இல்லை
துள்ளாத மனமும் துள்ளும்
அள்ளிக் கொஞ்சி செல்லும்
ஆசை கிளற அதுவும் ஓர் காரணம்
எல்லோருக்கும்
கொள்ளை ஆர்வம்
குழந்தைமேல் காரணம்
தானும் எப்போது
சுய நலம் அற்று
கள்ளம் விட்டு
கபடம் கெட்டு
தூய எண்ணம் பட்டு
சோகம் கெட்டு
வாழ்வோம் எப்போது
என்ற ஆதங்கம்

குழந்தை வளர
குறும்பும் வளரும்
கடவுள் அப்படியே நமக்கு
அதை ரசிக்கும் திறனையும்
அருள வேண்டும்
அல்லது குறைந்த பட்ச
பொறுமையையாவது
கொடுக்க வேண்டும்.

குழந்தை சிரிக்கும் போது
கொஞ்சுவதும்
அழும்போது சீறுவதும்
கடவுளும் இப்படி நம்மிடம்
நடக்காமல் இருக்க வோண்டுவதும்
எந்த ஊர் நியாயம்?

முடிந்தவரை நாம் குழந்தைகளுக்கு
அடித்தால் அழும் கலையை
அறிமுகப் படுத்தாமல்
விடுவதே சிறந்தது
நாம் மட்டும் கடவுளிடம்
அழும்போது நம்மை
அரவணைக்க மாட்டாரா
என ஏங்குவதும்
இன்று வரை
எனக்கு விளங்காத விடுகதை
குழந்தைக்கு நாம் மட்டுமே
அறிமுகமான பொருள்
அது அழுதாலும் சிரித்தாலும்
நம்மைதான் நாடும்
அரவணைத்து
அறிவுறுத்தி
ஆளாக்கி ஆண்டவனை ஆராத்திப்போம்
ஆண்டவன் அருள் நிச்சயம் கிட்டும்.

Thursday, August 9, 2007

மனதின் எண்ணங்கள்..

உயிரற்ற ரோமங்கள்
உயர்ந்து உணர்ச்சியில் எழுகிறது.
உதடு துடிக்கிறது
உள்ளக் கொதிப்பின் வெளிப்பாடு
விழியில் வழிகிறது.
கண்ணீரின் சுவை சேர்த்தது யார்?
இது சோகத்தின் சுவையா?
சுகத்தின் சுவையா?
பிரிவை அழிக்க வழி எங்கே?
பசியை ஒழிக்க வழி எங்கே?
பாசம் பொங்க பாவம் ஏது?
சுழலும் வாழ்கை
சுற்றும் பூமி
நிழலும் சிரிக்கும்
நான் ஓர் வரி சொன்னால்.
உழலும் மனதில் ஓர் ஆதங்கம்.
உருவம் இல்லா மனம்
உறங்க துடிக்கும் தினம்.

உளரல் சிதறல்
உருக்கும் குணம்
உருகும் தின்னம்.
மனதை கொடுத்து
மிரளச் செய்தாயா?
மிரண்டு போவேனா?
என்னை என்னுள் தேடி
நான் யார் என்ற கேள்வியை
எனக்கே கேட்டு
விடை காண
மன வீதி எங்கும்
திரிகிறேன்.

அந்த விடையின்
நிறம் என்ன?
சுவை என்ன?
முகம் என்ன?
மொழி என்ன?
தெரியாமல் விழிக்கிறேன்.
தெரிய துடிக்கிறேன்.
விடியுமென்று காத்திருக்கிறேன்.
நம்பிக்கை தோனியிலே
நாளும் என் பயணம் தொடரும்.

வலியை உணர
அனுபவம் வேண்டுமா?
சொன்னால் ஆகாதா?
புரியும்படி சொல்ல கூடாதா?
புதிர் போட்டு விடை தேடுகிறேன்.
நிதம் ஒரு பாடம் கற்கிறேன்.
பயணம் முழுதும் புது முகம்.
பார்கின்றேன்.
காரிருள் காற்று
ஓர் ஒளி தேடுகிறேன்.

நேரம் சேமிக்க
நேரம் ஏது?
பாரம் இல்லாமல்
பயணம் ஏது?
தடையில்லாமல்
தொடரும் பயணம்

விடை தேட
புழுவாக நெளிந்து
பூச்சியாக ஊர்ந்து
பறவை குஞ்சாக
கூட்டில் பிறந்து
பருந்தாக பறந்து
வானின் தூரம் அளந்து
வாழ வந்து வாழ்கிறேன்.
விழியுடன் நாளும் முழிக்கிறேன்.

சிரித்து அழுகிறார்களா?
அழுது சிரிக்கிறார்களா?
உழுது பிழைக்கிறார்களா?
உண்டு பிழைக்கிறார்களா?
உறங்க சொல்கிறார்களா?
உழைக்கச் சொல்கிறார்களா?

இதயம் இனிக்க
உதயமாகும்
என் எண்ணங்கள்.
வாழ்வு சிறக்க
வர்ணம் பூசுகிறேன்.
இந்த வாழ்வில்
போர்களம் இல்லை
அழுகுரல் இல்லை
கொடுந்துயர் இல்லை.
கெடு பகை இல்லை.
சுவைக்க தகுந்த
சுகங்கள் உண்டு.

உண்மை சுரக்கும்
வளம் உண்டு.
அகம் கொண்ட
அன்பு எங்கும் உண்டு.
பரம் பொருள்
காணும் ஞானம் உண்டு.
பூவின் மெல்லிய
இதழ் கொண்ட
மனம் உண்டு.
கருணை என்றும்
காரியத்தில் உண்டு.

அன்பின் வெள்ளம்
தடையில்லா உள்ளம்.
வைகறை பொழுதில்
மலையென வளர்ந்த
மனமெனும் தளிர்
விரிகதிர் போல விரியும்.
நல்ல மாற்றம்
நமக்கு உண்டென்று
மனதிற்கு புரியும்

மனங்களின் எழுத்து
புரியும் போது
மாற்றம் வரும்.
சினங்கள் மறையும்
இணக்கம் ஆகும்.
பிணக்கம் மறந்து போகும்.
சிறுமலர் போல
புன்சிரிப்பு மலரும்.
சிரிப்பின் சக்தி
சிகரங்களை தொட வைக்கும்.

அன்பினால் இயங்கும்
அகிலம் இருக்கும்.
வானம் நம் வசப்படும்.
துவக்கம் தேட
துவங்கும் எண்ணங்கள்.
குறைவில்லா நிறம் கொண்ட
என் சொப்பனங்கள்.
இவை எல்லாம்
இயற்கை நமக்களித்த
அர்பணங்கள்.

தூரம் மறந்த
தொழில் நுட்பங்கள்
துயரம் அறியா
செவி மடல்கள்.
கண்ணீர் அறியா கருவிழிகள்.
மன ஊஞ்சலில் ஆடும்
மகிழ்ச்சியான நேரங்கள்.

உறவுகள் வரவால்
சிறகுகள் விரியும்
உயரம் மறைய
உயரும் நிலை.
மனங்கள் அறியும்
மகிழும் கலை.
மழலை மொழி
புரியும் நிலை.
அமைதியின் விளக்கம்
விளங்கும் நிலை.
அன்பே அமைதி
அகிலம் உனது
என்னும் நிலை.

சொல்லின் சிறையிலே
பொருளின் பிடியிலோ
அடக்கலாகாது.
உணர்வில் வடித்து
உள்ளத்தில் எடுத்து
உள்ளே ஊடுருவும் உண்மை
உயிரில் கலந்த தன்மை.
உயரும் வழி சொல்லும் பெருமை.

Wednesday, August 8, 2007

பார்வைகளும் கேள்விகளும்..

எதிர்பார்ப்புகள் எளிதாகலாம்
ஏமாற்றமும் தரலாம்.
இதய வெள்ளம் போகும் தொலைவு
அளவிட முடியாதது
இயக்கும் எண்ணங்கள் அதிசயமானது.

இயங்கும் உடல் இனிமையானது
இன்பத்தை உணர துடிப்பது
துன்பத்தை உதர துடிக்கிறது.
எதையும் ஒரு அளவில் பார்க்கிறது
எதையும் அளக்கப் பார்க்கிறது.

அளவு குறைவானால் அழுது பார்க்கிறது.
பழுதானால் தொழுது பார்க்கிறது.
இயற்கைக்கு ஊதியம் ஏது?

எண்ணங்களின் எழுச்சி
சொற்களின் தொடர்ச்சி.
சொல்லின் உளி
மனதில் கிலி.
வலியின் வழி
வழியும் குருதி.
வாழ்வின் சறுக்கல்
அதன் மறதி.
மலையும் மடுவாகும்
மணலும் கையிறாகும்
வேண்டும் மனதில் உறுதி

வாழ்வதற்கே பல வாக்கியம்
சொல்லிவிட்டு சென்றார்கள்.
நிலத்தில் உள்ளது
பாலையும் சோலையும்
மேடும் பள்ளமும்,
சிகரங்களும் பள்ளத்தாக்குகளும்
அருவிகளும் ஓடைகளும்
காடுகளும் நகரங்களும்.

கல்லிருக்கும் முள்ளிருக்க்கும்
பாதை நம் கால்கள்
பழக்கப்பட்டதே
சோலைகளும் சொர்கங்களும்
சுகம் காண
நேரம் காலம் கனியப் போகிறதே.

பூச்செடியில் முட்கள் உள்ளது
அது பூவுக்கும் அழகு சேர்கிறது
முள்ளின் வலிமை பூவின் மென்மை
இரண்டும் இருப்பது
ஓர் இடத்தில்
இவை எல்லாம்
இறைவனின் அதிசயப் படைப்பில்
நமக்கு ஒரு பாடம்.

மழலை மனது
பரந்த மனது.
அது பிரபஞ்சத்தின் அளவு
நஞ்சில்லாதது
பிஞ்சு மனது
கறையில்லாதது
குழந்தை மனது

அதுவே முதுமை வரை தொடர்ந்தால்?
துன்பம் என்னும்
துயரம் என்னும்
கூறும் வார்த்தைகள்
நம் மொழியிலிருந்தே
மறைந்து போகும்
மேலவன் கூத்துக்கு
இணையாக நாம்
கூத்து கட்ட முடியுமா?

ஒரு வலியால்தானே
சுகத்தை உணரமுடியும்.
இருவிழியால்தானே
உலகை பார்க்க முடியும்.
பிரபஞ்சத்தின் பேரெழில்
பூமிக்கு வெளியேயும் உள்ளது.

ஒரு எல்லை போட்டு
அடக்க முடியாது
நட்சத்திரக் கூட்டம்
நம்மைப் பார்த்து சிரிக்கிறது.
சிறகில்லாமல் பூமி
வானத்தில் உருள்கிறது.
கைக்குள் அடங்காத நேரத்தை
தனக்குள் அடக்கி சுற்றுகிறது.
நேரம் மறந்து
நில்லாமல் சுற்றுகிறது
சோர்வில்லாமல் சுழல்கிறது.

காலங்களால் அளக்கமுடியாத
வயதானாலும் தினமும் புதிதாக பிறக்கிறது.

இதை திறமை என்பதா?
பொறுமை என்பதா?
வலிமை என்பதா?
முழுமை என்பதா?
பொழுதை பொத்தி வைக்க
பொந்து எங்கே உள்ளது?
வியர்வை இன்றி வலியில்லாமல்
வழிதவறாமல் தொடரும்
பயணம் துவங்கும் ஜனனம்.

வண்ணம் வானில் பூச
நிறம் கிடைக்காமல் திணறுகிறதா?
கருமைதான் கடவுளின் நிறமா?
சூரியனால் இருளை உணர முடியுமா?
பூமியின் காதல் சூரியனிடமா?
ஏன் அதையே சுற்றி வருகிறது?

தன்னை சுற்றும்
நிலவுக்கு பதில்லாமல்
நாணமா? நடுக்கமா?
பூமியே உனது நடுக்கத்திற்கு
மக்களல்லவா
கடுகு போல் சிதறுகிறார்கள்
இது உன் கோபமா? எரிச்சலா?
பச்சை புல்வெளியும்
நீல கடலும் உடுத்தியிருப்பதால்
உனக்கு
உன் அழகின் மேல் கர்வமா?
உன் சுற்றுப் பாதையை
கற்றுதந்தவர் யார்?
விற்பனை இல்லாத
என் கற்பனை கேள்விகளுக்கு
பல் இளிக்காமல் பதில் தருவாயா?
அல்லது
முகம் மறைத்து முக்காடிட்டு
முனகாமல் போவாயா?
உன் உதடுகள் பழகும் மொழியை
எனக்கு கற்றுத் தருவாயா?
உறக்கம் இல்லாமல் உலவும் நீ
உருகும் என்னை மறக்காதே?

எதுவும் தெரியாதது போல் மழுப்பாதே!
நீ உன்னையே சுற்றிக் கொள்ளவும்
நெருப்புத் தலைவனை சுற்றவும்
எங்கிருந்து பெறுகிறாய் சக்தி?
அதன் உத்தியை சொல்ல கூடாதா?

முக்தி அடைய புத்தி வேண்டுமா?
சுகத்தின் பொருள் என்ன?
சுலபத்தில் விடை உண்டா?
சொல்லத்தான் பதில் உண்டா?
சொன்னால்தான் புரிந்திடுமா?
சொல்லினால்தான் விளங்கிடுமா?
விதியை வெல்ல வழி உண்டா?
விதியே வென்றால் பழி உண்டா?
விதியே கதி என்று
சதி செய்யாமல்
நாமே விதியானால் என்ன?
விலகும் தடைகள்
நம் பாதை வழியில் இருந்து.
விடியலை உருவாக்க நமக்குள்
இருக்கும் வெளிச்சத்தை
வெளியில் விட்டு
பிரபஞ்சத்தின் இருள் போக்கலாம்.

 
software software