Monday, July 23, 2007

கடவுளின் கர்வம் - பெண்..

உலகை உருட்டி
உயிரை ஊட்டி
இயங்கச் சொல்லி
இயக்க வைத்து
உருவம் கொடுத்து
அழகு பார்த்து
வாழ வைத்து
ஆளப் பார்த்தான்
தான் படைத்த
ஒவ்வொன்றும்
தரணி செழிக்க
வேண்டுமென்று
தனக்கோர் உருவம்
வேண்டுமென்று
தவித்து வடித்த
உருவம்தான் பெண்.

பிழை என்று பல செய்தாலும்
பொறு என்று பார் உணர
வைத்தாள்(ன்) கடவுள்.
'ள்' என முடிதல் அவள் என்றும்
'ன்' என முடிதல் அவன் என்றும்
சொல்லி கடவுள்
பெண்மையில் கலக்கச் செய்து
அன்பை உண்மையில்
உணர வைத்து
படைக்கும் தொழில் ஏற்று
பஞ்சு போல் நெஞ்சு கொண்டு
அதில் பாசம் கலந்து
பற்று வைத்து
அள்ளி எடுத்து
அணைத்து கொள்வாள் தாய்
அக்காள், தங்கை
அத்தை அண்ணி
என்று முகம் பல உண்டு அவளுக்கு
அன்பை சிரிப்பால் உதிர்பாள்
அறிவை அள்ளித் தெளிப்பாள்
காதல் கொண்டு காவல் காப்பாள்
கண்ணைக் கொண்டு கடலை அளப்பாள்
காமம் கொண்டு மோகம் வளர்ப்பாள்
வேகம் கொண்டு தாகம் தணிப்பாள்
தோழி என்று துவங்குவாள்
ஆழிப் பேரலையாய் விழுங்குவாள் காதலி

மனைவி என்று
மாற்று வேடம்
துணைவி என்று
நிழல் போல் தொடர்ந்து
கணவனுக்கு காத்து நின்று
கடமை கொண்டு காத்து நின்று
கருணைக் கடல் வென்று
கரை சேர்ப்பாள்
கறை இல்லா
உரை செய்து
உள்ளம் மகிழ வைப்பாள்
விடுப்பில்லா வேலை செய்து
விளங்க வைப்பாள்
அடுப்பில் வெந்து
சுகம் மறந்து
பசிச் சுமை குறைப்பாள்
தியாகம் என்னும் யாகம் செய்து
தரணி வாழ தானும் வாழ்வாள்
கற்பை தனக்குள் வைத்து
கருப்பை காப்பாள்
குடும்பம் என்னும் அரங்கம் ஏறி
குழப்பம் இன்றி பழக்கம் கற்று
ஒழுக்கம் உணர்ந்து பாத்திரம் அறிந்து
படுக்கை படர்ந்து
பத்தினி என்று உத்தமியானள்

பழி சொன்னால்
விழி துடைப்பாள்
மொழியின்றி வழி செய்வாள்
பாச வேலியிட்டு
குழந்தைப் பயிர் வளர்ப்பாள்
உயிர் ஊட்டி
உறங்க வைப்பாள்
அழகின் அர்த்தம்
அகராதியில் உள்ளது
அவளின் பெயர் கொண்டு
உயிர் வளர்க்கும்
இயந்திரம் அல்ல அவள்
உள்ளம் உருக வைக்கும்
மந்திரம்
உலகம் சொல்ல
இல்லை சுதந்திரம்
முக்தி காண அவள் சக்தி வேண்டும்
முத்து குளிக்க அவள் பக்தி வேண்டும்
வேடம் ஏற்று
பாடம் புகட்டும்
புடம் போட்டத் தங்கம் அவள்.
அவள்தான் பெண்.

1 comment:

Unknown said...

மிகவும் அருமையான கவிதை. பெண்ணே பெருமை கொள்ளும் படி எழுதிய எழுதாளருக்கு எனது பாராட்டுக்கள்
சுபா ரவி

 
software software