கனவுகள் துரத்தும் காலம் கரையும்
விலையாய் கொடுத்து அது விரையும்
கண்ணில் காண்பது மட்டுமா கனவு?
கருத்தில் இருப்பதும்தான் கனவு.
கட்டுப்பாடில்லாமல் கட்டுக்குள் வர மறுக்கிறது
பிடி கொடுக்காமல் அது படை எடுக்கிறது
எடுத்த வேகத்தில் அடுத்த அடி வைக்கிறது
வீசும் காற்றை விட அது வீரு நடை போடுகிறது
விருப்பம் கேட்காமல் மன வீட்டில் அடைகிறது
சில நேரம் விரும்பி அழைத்தாலும் வீம்பு பிடிக்கிறது
பகுதி நேரத் தொழிலாய் பார்த்து செல்கிறது
பழுதில்லாமல் அதன் பயணம் தொடர்கிறது
நெஞ்சில் ஊஞ்சல் ஆடி நெருக்கடி தருகிறது
நேரம் ஏது காலம் ஏது நேரில் வருவதற்கு
கண்ணின் உறக்கத்தை களவாடுகிறது
கருமம் செய்ததால்தான் வருகிறதா?
கண்ணுக்குள் இருந்து கருவிழியை உருவுகிறது
மண்டைக்குள் மலையாக
மனதிற்குள் பாரமாக கரைய மறுக்கிறது
மறுத்தால் அறைந்து நொருக்குகிறது
கனவுக்கு யார் உணவு போடுகிறார்கள்?
நிலவு கரைந்து வளர்வது போல
கனவும் கலைந்து மலர்கிறது.
நல்ல, கொட்ட என கனவுகளில் விதை தூவுவது யார்?
கனவு காட்சிகாட்டி காயபடுதுகிறது.
நினைவு நெருப்பூட்டி நோகடிக்கிறது.
நிலவின் ஒளி நிலையானதல்ல
கனவின் காட்சியும் நிலையானதல்ல
தலையின் மூலையில் உதிக்கும் ஒரு எண்ணகீற்று
உருவம் தந்து ஓட்டம் தந்து நம்மை ஆட்ட பார்க்கிறது.
நினைவின் எதிரொலியாய்
கனவு கண்ணுக்குள் வருகிறது
பகலை பார்த்து பயம் அதற்கு
இரவின் இருளில் நிறம் எதற்கு?
கனவின் சூட்டால்
இமை மயிர் கருகும்
கனவுக் காளையை இருளில்
இட்டுச் செல்லாமல் எதிர்கால
ஒளி நோக்கி
திருப்பி விட வேண்டும்
சில கனவுகள் மறதியை
மறுத்து மனதில் பதிந்து விடும்
அதை விடுவிக்க முடியாமல்
விரக்தியில் விழி இமைகள் நனைந்து விடும்.
கருமம் பிடித்த கனவுகளுக்கு
கதவுகள் போட்டு தாழிடவும்
நல்ல விதைகளை நினைவில் தூவினால்
பல நல்ல கனவுப் பயிர் விளையும்
விளை நிலமும் நல்ல விளைச்சல் எடுத்து தரும்
விருந்தும் சுவைக்க விருப்பம் வரும்.
நல்ல கனவை கலைக்க குலைக்க
கடுங் கோபம் கொண்ட காரியம் நடந்தாலும்
கட்டு குலையாமல் தொடர வேண்டும்.
கனவுக் கோலத்தை
மழை மேகம் கொண்டு அழிக்கவும்
பிழை என்று துடைக்கவும்
பலரும் பலவாறு முனைவர்
பாவி என்றும்
பாதகம் இழைத்தேனா என்றும்
இடிவிழுந்தார்போல் இடிந்து உட்காராமல்
மலையென வளர்ந்து
முகிலை முகர வேண்டும்
பூவுக்குள் பூகம்மே வந்தாலும்
வாசம் வீசும் வேலைக்கு விடுமுறை கிடையாது
பூத்து, காய்த்து, கனிந்து வரும் வரை
காத்து கடமை செய்ய வேண்டும்
மனக் கோட்டை மலைகோட்டையாய்
உறுதியுடன் உயர்வு பெற
உண்மையான கனவு காண
கடவுள் துணை வேண்டும்
இடர் கொடுக்கும் இடுக்கண் களைந்து
மிடுக்குடன் கனவை மெய்பிக்க வேண்டும்.
அதை பழித்தவரும் பிழைக்கட்டும்
பிறகு இருந்து பார்க்கட்டும்
பிழை அல்ல நிறை என்று காணட்டும்
கண்டு மகிழட்டும்.
நம்மை வீழ்த்த விரும்புவர்
விருப்பம் என்றைக்கும்
நிறைவேறாது போகட்டும்.
காற்றில் பறக்கும் காற்றாடியாய்
சுற்றி கரைந்து போகட்டும்.
விதை தூவும் வேலையை
விரைந்து முடிக்க வேண்டும்
ஆனால் அதற்கு முடிவேது?
வேலை தொடர்ந்தால்தான்
வேளை ஒன்றுண்டு
நாளை நமக்குண்டு
சிரமம் இல்லாமல்
சிரம் ஏற்று உரம் போட்டு
மெறுக்கேற்றி உயிர்பிக்க வேண்டும்
உயர்ந்து உளம் வாழ்த்த வேண்டும்.
வற்றாத அருவி போல்
வழி தேடி கரை காண்போம்
குறை களைவோர் குணம் அதுதான்
குற்றம் சொல்லாமல் தினம்
வளர்ந்து நமை உணர்ந்து
நன்மை செய்வோம்.
கருவறை ஒரு திரை விலகும் வரை
வைராக்கியம் காத்து காண்போம் தரிசனம்
கருவில் கிடந்த பத்து மாதத்தில்
கற்பனை கனவு வளர்த்தோம்
பயணம் தொடர்ந்து
கட்டிலில் கிடத்தி
காவியம் பாடி
பெயர் சூட்டி
தரையில் வளர்ந்து
தவழ்ந்து நடந்து
கனவுக்கு உருவம்
கொடுக்க முனைந்து
தெரியாமல் காளை பருவம் அடைந்து
புதுக் கற்பனை
புதுக் கனவு
புதுக் கவிதை தோன்றி
புது யுகம் படைக்க
இது நேரம் என கணக்கு பாராமல்
காகிதம் கிறுக்கி தொடரும் பயணம்
பெற்றோர் பிள்ளைகள் தம் மனைவியோடு
சொந்த பந்தம் படை சூழ
இயற்கை இறைவர் இசைந்து
கனவுக் கடலில் நீந்தி
முத்தெடுத்து கரை சேர்வோம்.
Wednesday, June 20, 2007
கனவுகள்..
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Wednesday, June 20, 2007
Labels: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment