உடலைப் படைத்து
உள்ளத்தை விலையாக
எடுத்து கொண்டான்.
படைத்ததை வைத்து
பிழைக்க வேண்டினான்.
மறுத்து பயனில்லை.
பிழைத்தாக வேண்டும்.
உழைத்தாக வேண்டும்.
சதை உண்டு
விதை இல்லை
வலி உண்டு
வழி இல்லை.
பழி உண்டு
பாவம் இல்லை.
சோறு உண்டு
சுகம் இல்லை
சிங்காரம் செய்வது சம்சாரிக்க.
சிரித்து குழைவது அவன் கவனிக்க.
உருவம் கொடுத்து
பருவம் கொடுத்து
மனம் கெடுத்து
தானம் செய்து
வாழ்வு வாழ
இந்த உடலை தந்தான்.
சூழ் நிலை கைதியாய்
சுகம் கொடுக்கும் இயந்திரமாய்
சுரக்கும் இந்த பாத்திரம்.
பொருள்களின் விலை எப்போது ஏறும்
இவர்களின் நிலை ஏப்போது மாறும்?
பருவம் இவர்களின் கருவம்
உருவம் பாறினால் அதுவே பாரம்.
வயிற்றை கழுவ வலியயை
பொறுக்க வேண்டும்.
மஞ்சள் கயிற்றைக் கொடுக்க
சிலர் வர வேண்டும்.
சிலையாய் சிங்காரித்தால்தான்
சிலர் வருவார்கள்.
தன் குடும்பம் என்றொரு
உலகம் பார்க்க மனதில்
ஒரு ஏக்கம் உண்டு
வாழ்கையே ஒரு கானல் நீரா?
அல்லது வறண்டு போன ஆற்று நீரா?
என்ற கேள்வி என்றும்
உள்ளத்தில் உண்டு.
இவர்கள் சுரண்ட சுரண்ட
சுரக்கும் இன்ப சுரங்கம்.
தன் நலம் இல்லா குணம்
தன் வலி பொறுத்து
வருபவர் இன்புற வாழ்பவர்கள்.
சட்டம் ஒடுக்கும்
சமுதாயம் பழிக்கும்
ஆனாலும் சத்தமில்லாமல்
வாழ்கை தொடரத்தான் வேண்டும்.
சளைத்தாலும் சலித்தாலும்
இழுத்தவர் பக்கம்
சாயத்தான் வேண்டும்.
பணம் உண்டு அவனிடம்
சுகம் உண்டு இவளிடம்.
வந்தவன் வலி கொடுப்பான்
வஞ்சியவள் வலி பொறுப்பாள்.
வாழ்கை வலியும்
தேக வலியும்
பழக்கம் கொண்டாள்.
வாடாதது வாடக்கூடாதது
இந்த வாடகை மலர்கள்.
வாடினால் வாழ்கையேது?
வாடகை சந்தோஷம்
வழங்கும் விருப்பமில்லா மகிழ்ச்சி
வழங்குமோர் நிகழ்ச்சி.
வாலிபப் பசியாற வருவோர்
இங்கு ஆயிரம்.
பருவம் இருக்கும் வரை வழங்கும்
இன்பம் யாரிடம்?
முகவரி இல்லா முகத்திற்கு
முந்தானை விரித்து
முகம் சுளிக்காமல் முனகி
கரையும் தேகம் இளகி
மெழுகாய் உருகி
மனப்பூவும் கருகி
பழகிப் போன ஒன்று.
விடியலுக்காக விடியும்
வரை உழைத்து
விடிந்து வெளிச்சம்
காணாமல் தவித்து
தொடரும் ஒரு வாழ்கை.
ஆசை என்பதன்
அர்த்தம் அறியாமல்
வேஷம் போட்டு
பாசம் காட்ட
காசும் வரும்
நேசம் இல்லா
வாழும் வாழ்வு.
காசுக்கு கடை விரித்தாள்
கனவுக்கு விடை கொடுத்தாள்.
கல்லினால் மலர் பிம்பம்
செதுக்கிக் கொண்டாள்
அதயே தன் மனம்
என்று கொண்டாள்.
காகிதப் பூக்கள் வாசம் வருட
வாழும் பூக்கள்
ஒரு பூ பணத்தை கண்டால்
படுக்கையில் மலரும் இந்த பூ
சாத்திரம் தேவையில்லை
கோத்திரம் பார்ப்பதில்லை
தாரம் தரவில்லையெனில்
தருவாள் இவள் மேனி
சுகம் பொருளுக்கிணையாக.
அலங்காரம் செய்வது
அவசியம் கலைவதற்கு
மோகத்தீயில் மெழுகாய் உருகுவர்
இங்கு வந்து குளிர் காய்வர்.
மோகத்தில் மோட்சம் அடைவது
இவர்களிடத்தில்தான்.
நாலு சுவருக்குள் ஓர் உலகம்
துணைகள் மாறும் தனி உலகம்.
சதையுடன் சந்தைக்கு வந்ததால்
சிதையானது இவர்கள் வாழ்வு.
சிகப்பு விளக்கு எரியவிட்டு
செயற்கை சிரிப்பை உதட்டில் விட்டு
சில நொடிக்காக சிங்காரம் செய்து
சின்ன சினுங்கல் தவறாமல் செய்து
தூண்டிலிட்டு மீன் சிக்க காத்திருந்து.
சிக்கிய மீனுக்கு
சிலாகித்து கொள்ள வேண்டும்.
அரிதார்ம் பூசி
ஆளை மயக்குவதும்
ஒரு கலைதான்.
தேகம் வளர்க்க
சுகயாகம் செய்பவர்கள்.
பூவுலகில் வந்து விட்டோம்.
வாழும் வரை
வாழ்ந்து பார்த்திடுவோம்
என்று வாழ்பவர்கள்.
கயிற்றையும் விஷத்தையும்
முத்தமிட்டு தன் வாழ்வை
முடித்துக் கொள்ளும்
கோமளிகளின் முன்
வாழ்வே விஷமானலும்
ஓர் விடியலுக்காக
உருகும் மொழுகுவர்த்திகள்.
Wednesday, September 19, 2007
வாடாத காகிதப் பூக்கள்.
படைப்பு.... மடல்காரன்_MadalKaran at Wednesday, September 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment