Wednesday, September 19, 2007

பிரிவின் செயல்..

தூக்கம் தொலைந்தது
தொண்டை வறண்டது
சொல்லும் சொல்
மறந்து போனது
இமை மறுத்த தூக்கம்
விரட்டியது யாரோ?
விடை தேடி விரைகின்றேன்
திசை தெரியாமல்.
மனதின் விஷம்
செயலில் கொடுமை
சொல்லில் கடுமை
செவியில் விழும்
அள்ள கைகள் இல்லை
அடைக்க பைகள் இல்லை
பயணம் முழுதும் பாரம்
நிழல் கிடைத்தால் இளைபாரும்
அந்த நிழலைத்தான் கண்கள் தேடும்
எந்த குழலும் கானம் பாடும்.
அது இந்த செவி
மடலில் சிதறிச் செல்லும்.
சுவாசிக்கும் காற்று
சுகமாய் தோன்றும்
உள்ளிழுத்த காற்று
குளிர்ந்து இருந்தது
வெளியிட்டது சூடாய் இருந்தது.
என் மனம் வழி வந்ததாலா?
பிரிவு மட்டும் அடிக்கடி
ஏன் வருகிறது.
பிரிவதால் என்ன பயன்?
உயிரற்ற உடலாய்
உலவவிட்டு உருகும்
உயிரை மறக்க வைக்கிறது
இதற்கும் விதியின் மீது
பழி போட விருப்பமில்லை.
என் மதியை நினைத்து
நானே நொந்து கொண்டேன்.
விழியில் சிறை வைத்தேன் உன்னை
கனவில் மட்டும் சிறை திறக்கிறாய்
இமை திறந்தால் நீ மறைகிறாய்.
உன்னிடம் நான் தொலைந்ததை
உணர்ந்தேன் இப்பிரிவால்.
தொலைந்த இடம் தெரிந்ததால்
தேடும் மனம் இல்லை என்னிடம்.
நினைவுகளால் உறக்கத்தை
உறங்கச் சொல்ல ஒத்தி வைக்கிறேன்.

வாடாத காகிதப் பூக்கள்.

உடலைப் படைத்து
உள்ளத்தை விலையாக
எடுத்து கொண்டான்.
படைத்ததை வைத்து
பிழைக்க வேண்டினான்.

மறுத்து பயனில்லை.
பிழைத்தாக வேண்டும்.
உழைத்தாக வேண்டும்.
சதை உண்டு
விதை இல்லை
வலி உண்டு
வழி இல்லை.
பழி உண்டு
பாவம் இல்லை.
சோறு உண்டு
சுகம் இல்லை

சிங்காரம் செய்வது சம்சாரிக்க.
சிரித்து குழைவது அவன் கவனிக்க.

உருவம் கொடுத்து
பருவம் கொடுத்து
மனம் கெடுத்து
தானம் செய்து
வாழ்வு வாழ
இந்த உடலை தந்தான்.

சூழ் நிலை கைதியாய்
சுகம் கொடுக்கும் இயந்திரமாய்
சுரக்கும் இந்த பாத்திரம்.
பொருள்களின் விலை எப்போது ஏறும்
இவர்களின் நிலை ஏப்போது மாறும்?

பருவம் இவர்களின் கருவம்
உருவம் பாறினால் அதுவே பாரம்.
வயிற்றை கழுவ வலியயை
பொறுக்க வேண்டும்.
மஞ்சள் கயிற்றைக் கொடுக்க
சிலர் வர வேண்டும்.

சிலையாய் சிங்காரித்தால்தான்
சிலர் வருவார்கள்.
தன் குடும்பம் என்றொரு
உலகம் பார்க்க மனதில்
ஒரு ஏக்கம் உண்டு
வாழ்கையே ஒரு கானல் நீரா?
அல்லது வறண்டு போன ஆற்று நீரா?

என்ற கேள்வி என்றும்
உள்ளத்தில் உண்டு.
இவர்கள் சுரண்ட சுரண்ட
சுரக்கும் இன்ப சுரங்கம்.
தன் நலம் இல்லா குணம்
தன் வலி பொறுத்து
வருபவர் இன்புற வாழ்பவர்கள்.
சட்டம் ஒடுக்கும்
சமுதாயம் பழிக்கும்
ஆனாலும் சத்தமில்லாமல்
வாழ்கை தொடரத்தான் வேண்டும்.
சளைத்தாலும் சலித்தாலும்
இழுத்தவர் பக்கம்
சாயத்தான் வேண்டும்.

பணம் உண்டு அவனிடம்
சுகம் உண்டு இவளிடம்.
வந்தவன் வலி கொடுப்பான்
வஞ்சியவள் வலி பொறுப்பாள்.
வாழ்கை வலியும்
தேக வலியும்
பழக்கம் கொண்டாள்.
வாடாதது வாடக்கூடாதது
இந்த வாடகை மலர்கள்.
வாடினால் வாழ்கையேது?
வாடகை சந்தோஷம்
வழங்கும் விருப்பமில்லா மகிழ்ச்சி
வழங்குமோர் நிகழ்ச்சி.

வாலிபப் பசியாற வருவோர்
இங்கு ஆயிரம்.
பருவம் இருக்கும் வரை வழங்கும்
இன்பம் யாரிடம்?
முகவரி இல்லா முகத்திற்கு
முந்தானை விரித்து
முகம் சுளிக்காமல் முனகி
கரையும் தேகம் இளகி
மெழுகாய் உருகி
மனப்பூவும் கருகி
பழகிப் போன ஒன்று.


விடியலுக்காக விடியும்
வரை உழைத்து
விடிந்து வெளிச்சம்
காணாமல் தவித்து
தொடரும் ஒரு வாழ்கை.
ஆசை என்பதன்
அர்த்தம் அறியாமல்
வேஷம் போட்டு
பாசம் காட்ட
காசும் வரும்
நேசம் இல்லா
வாழும் வாழ்வு.
காசுக்கு கடை விரித்தாள்
கனவுக்கு விடை கொடுத்தாள்.
கல்லினால் மலர் பிம்பம்
செதுக்கிக் கொண்டாள்
அதயே தன் மனம்
என்று கொண்டாள்.

காகிதப் பூக்கள் வாசம் வருட
வாழும் பூக்கள்
ஒரு பூ பணத்தை கண்டால்
படுக்கையில் மலரும் இந்த பூ

சாத்திரம் தேவையில்லை
கோத்திரம் பார்ப்பதில்லை
தாரம் தரவில்லையெனில்
தருவாள் இவள் மேனி
சுகம் பொருளுக்கிணையாக.

அலங்காரம் செய்வது
அவசியம் கலைவதற்கு
மோகத்தீயில் மெழுகாய் உருகுவர்
இங்கு வந்து குளிர் காய்வர்.

மோகத்தில் மோட்சம் அடைவது
இவர்களிடத்தில்தான்.
நாலு சுவருக்குள் ஓர் உலகம்
துணைகள் மாறும் தனி உலகம்.
சதையுடன் சந்தைக்கு வந்ததால்
சிதையானது இவர்கள் வாழ்வு.

சிகப்பு விளக்கு எரியவிட்டு
செயற்கை சிரிப்பை உதட்டில் விட்டு
சில நொடிக்காக சிங்காரம் செய்து
சின்ன சினுங்கல் தவறாமல் செய்து
தூண்டிலிட்டு மீன் சிக்க காத்திருந்து.

சிக்கிய மீனுக்கு
சிலாகித்து கொள்ள வேண்டும்.
அரிதார்ம் பூசி
ஆளை மயக்குவதும்
ஒரு கலைதான்.
தேகம் வளர்க்க
சுகயாகம் செய்பவர்கள்.
பூவுலகில் வந்து விட்டோம்.
வாழும் வரை
வாழ்ந்து பார்த்திடுவோம்
என்று வாழ்பவர்கள்.
கயிற்றையும் விஷத்தையும்
முத்தமிட்டு தன் வாழ்வை
முடித்துக் கொள்ளும்
கோமளிகளின் முன்
வாழ்வே விஷமானலும்
ஓர் விடியலுக்காக
உருகும் மொழுகுவர்த்திகள்.

Thursday, September 6, 2007

ஆத்திச்சூடி பிழை..?

கருவில் தோன்றி
உருவம் பெற்று
என் இனத்தவராலே
இரக்கப்பட்டு
தரையில் கிடத்தப்பட்டேன்.

உடல் உறுப்பின் மாற்றத்தினால்
சிலரால் வெறுக்கப்பட்டேன்.
சூடான சுவாசக்காற்று
என் மேல் பட்டு
உடல் சிணுங்கி
கண் விழித்தேன்
எனக்கு நெருக்கமான வாசம்.
எனக்கு உதிரம் கொடுத்து
உருவாக்கிய வாசம்.

சற்று கிழே பார்க்கிறேன்
உடலை வளர்க்கும்
உணவு உட்கொள்ள உதவும்
குழாயை காணவில்லை
என் வயிற்றில்
கொடி இருந்த இடத்தில்
முடி இருந்தது செந்நிறத்தில்.

நாவின் வேலை ஆரம்பமானது
உணவு உள்ளே செல்ல இதுதான் வழி.
செவியின் வழி ஒலி வந்தது
பெண்ணா’ என்ற சொல் வந்தது
அதுதான் நான் கேட்ட முதல் சொல்
எனக்கு பாலூட்டினாள்
அப்போதுதான் தெரிந்தது
அவள் என் தாய் என்று
தந்தை எனை பார்க்க வரவில்லை
தடை போட்டது அவர் தாய்.
என் பாட்டி.

வாரம் இரண்டு சென்றது
வருவார் என்று
வழி மேல் விழி வைத்தாள் என் தாய்.
வந்தார் அவரும் அவளை பார்க்க
இருட்ட தொடங்கியது இரவு தங்கினார்

என் அழுகை சத்தம்
போனது வீட்டார் உறக்கம்
என் அப்பா கோபம்
போனார் அவர் வீட்டோடு
என் தாயுடன் நானும் தங்கினேன்

நாள் குறித்து நால்வருடன் வந்து
ஊர் அறிய கூட்டிச் சென்றார்
என் அப்பா எங்களை ஓர் நாள்

பாட்டியின் சோகம் நான் பெண் ஆனது
அம்மாவின் சோகம் நான் ஆணாக பிறக்கவில்லை என்று
அப்பாவின் கோபம் என் அழுகையின் மேல்
அட! ஏன் இந்த கசப்பு?
முக்குக்கொருவர் முகத்தை வைத்து கொண்டா
இந்த வரவேற்பெனக்கு?
என்னாலா இந்த பிணக்கு?
புரியவில்லை இவர்கள் கணக்கு.!
சத்தம் கேட்கும் திசையைப் பார்ப்பேன்
சிலர் முகத்தருகில் வந்து முழியை பார்ப்பர்
முத்தம் கொடுக்க.

நீரை ஆகாரமாய் உண்ட நான்
சோறை ஆகாரமாய் உணகிறேன்
பள்ளி செல்லும் வயதடைந்தேன்
பள்ளி சென்றேன் படித்தேன் நானும்
ஓட்டப் பந்தயம் சேர ஆசை.!
தாயிடம் சொன்னேன் அவள் தந்தோ வசை.!
பட்டுப் பாவாடை கொடுத்தார்கள்
உடுத்திக்கொண்டேன்.

என் உடலில் சிற்ச்சில மாற்றங்கள்.
தாயின் அரவணைப்பு அதிகம் தேவைப்பட்டது.
பாவாடை தாவணியாக மாறியது என் உடை.
பள்ளி முடித்து கல்லூரி அடி வைத்தேன்.
ஆணிடம் பேச தடை.
விடுதி என்பதே எங்களுக்கு சிறை.
சிலரின் பார்வைகளால்
எங்கள் உடையை சரிபார்க்க வேண்டியிருந்தது.
பெண்ணீயம் பேசும்
பித்தர்கள் எல்லாம்
சித்தர்களாகவே தெரிந்தார்கள்.

பட்டம் வாங்கும் முன்
திட்டம் போட்டார்கள்
வீட்டிலுள்ளவர்கள்.
திருமணம் என்று சொல்லி
என் மனவிருப்பம் கேட்க்கவில்லை.
அவர் மனம் மகிழும் ஆடவனை
மாப்பிள்ளை என்றார்கள்.
வீடு என்பதே சிறையா?
விரும்பிப்போகும் அறையா?
பறவை நான் ஒரு கூட்டிலுருந்து
மறு கூடு வந்தேன்.

என்னவன் என்று
அவனுடன் போனேன்.
புது வீடு புது உலகம்
புது மனிதர்கள்
புது பழக்கம்.
எல்லாம் கற்றேன்.
இளமை நினைவுகள்
இனிமையாக தொடர்ந்தன.
என்னவரின் அன்னை உட்பட
பெரும்பாலனவர்கள் சொன்னார்கள்
பையனை பெத்து கொடுமா’ என்று.
அப்போது புரிந்தது
அரிது அரிது மானிடராய் (பெரிய-நீ-இடர்) பிறத்தல் அரிது’ என்று.
ஒளவையின் சொற் பிழையை திருத்தலானேன்
இப்படி ‘அரிது அரிது மாதாராய் பிறத்தல் அரிது’ என்று.

 
software software