Saturday, December 20, 2008

பாரதியின் எழுத்து..

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

(+)

அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!

(+)

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!

(+)

காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்

Tuesday, December 2, 2008

நல்லாரைக் காண்பதும்..

நல்லாரைக் காண்பதும் நன்றே நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே.
- ஔவையார்

1.அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

Saturday, October 11, 2008

பெண் வாழ்க.

சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்
பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!
பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
பக்கத்தில் பங்கு கொள்வோம்!
பாதாதி கேசமும் சீரான நாயகன்
பளிச்சென்று துணைவி வாழ்க!
படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்
பாதியாய்த் துணைவன் வாழ்க!
தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு
என்றெண்ணியே தலைவி வாழ்க!
சமகால யோகமிது வெகுகால யாகமென
சம்சாரம் இனிது வாழ்க!
--கண்ணதாசன்
நன்றி : http://kick-off.blogspot.com/

Friday, April 25, 2008

குறை ஏதுமில்லை..

உதிக்கும் கதிரின் வெளிச்சத்தில் குறை ஏதுமில்லை
சுரக்கும் நீரூற்றின் சுவையில் குறை ஏதுமில்லை
வீசும் காற்றின் வேகத்தில் குறை ஏதுமில்லை
பூக்கும் பூவின் இதழில் குறை ஏதுமில்லை
பூமி சுழலும் முறையில் குறை ஏதுமில்லை
குளிர் நிலவின் ஒளியில் குறை ஏதுமில்லை
வளரும் பயிரின் தோற்றத்தில் குறை ஏதுமில்லை
பறக்கும் பறவையின் ஆற்றலில் குறை ஏதுமில்லை
நெளியும் புழுவின் வாழ்வில் குறை ஏதுமில்லை
நீந்தும் மீனின் ஓட்டத்தில் குறை ஏதுமில்லை
கடல் அலையின் சீற்றத்தில் குறை ஏதுமில்லை
மலை பாறை உறுதியில் குறை ஏதுமில்லை
இருக்கும் மண்ணின் வளத்தில் குறை ஏதுமில்லை
பெய்யும் மழையின் ஈரத்தில் குறை ஏதுமில்லை
மாறும் பருவ நிலையில் குறை ஏதுமில்லை
சீறும் சிங்கத் தோற்றத்தில் குறை ஏதுமில்லை
பதுங்கி பாயும் புலியிடம் குறை ஏதுமில்லை
நீர் தேடும் மரவேர்களில் குறை ஏதுமில்லை
வளைந்து படரும் கொடியில் குறை ஏதுமில்லை
பாய்ந்து ஓடும் ஆற்றில் குறை ஏதுமில்லை
துள்ளித் திரியும் மானிடம் குறை ஏதுமில்லை
கானம் பாடும் குயிலிடம் குறை ஏதுமில்லை
பார்த்து படைத்த மனித மனதில்தான்
என்ன குறை என்று இறைவனுக்கு விளங்கவில்லை.

 
software software