Saturday, July 28, 2007

பதினாறு பேறுகள் பற்றிய அழகிய பாடல்..

"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று நம் மரபில் பெரியோர்கள் வாழ்த்தி வருகிறார்கள். இது பற்றிக் கூறும் பாடலைப் பற்றி தமிழ் அறிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன். அவர் தந்த அந்தப் பாடலும், விளக்கமும் இதோ -.. அது அபிராமி அம்மை பதிகத்தின் முதல் பாடல். அபிராமி அம்மை பதிகத்தின் பதினோரு பாடல்களும் இங்கே கிடைக்கின்றன
:http://www.tamil.net/projectmadurai/pub/pm0026/abipatsc.html

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கவடுவா ராத நட்பும்
.....கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணிஇ லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும் தவறாதசந் தானமும்
.....தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள்வா ராதகொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாத வாழ்வும்
.....துய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகட வூரின் வாழ்வே
....அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே!

பொருள் : கல்வி, நீண்ட ஆயுள், கபடில்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான அருகதை, எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும்.

Wednesday, July 25, 2007

பாரதியார் பாடல் - கண்ணம்மா என் காதலி

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8

Monday, July 23, 2007

கடவுளின் கர்வம் - பெண்..

உலகை உருட்டி
உயிரை ஊட்டி
இயங்கச் சொல்லி
இயக்க வைத்து
உருவம் கொடுத்து
அழகு பார்த்து
வாழ வைத்து
ஆளப் பார்த்தான்
தான் படைத்த
ஒவ்வொன்றும்
தரணி செழிக்க
வேண்டுமென்று
தனக்கோர் உருவம்
வேண்டுமென்று
தவித்து வடித்த
உருவம்தான் பெண்.

பிழை என்று பல செய்தாலும்
பொறு என்று பார் உணர
வைத்தாள்(ன்) கடவுள்.
'ள்' என முடிதல் அவள் என்றும்
'ன்' என முடிதல் அவன் என்றும்
சொல்லி கடவுள்
பெண்மையில் கலக்கச் செய்து
அன்பை உண்மையில்
உணர வைத்து
படைக்கும் தொழில் ஏற்று
பஞ்சு போல் நெஞ்சு கொண்டு
அதில் பாசம் கலந்து
பற்று வைத்து
அள்ளி எடுத்து
அணைத்து கொள்வாள் தாய்
அக்காள், தங்கை
அத்தை அண்ணி
என்று முகம் பல உண்டு அவளுக்கு
அன்பை சிரிப்பால் உதிர்பாள்
அறிவை அள்ளித் தெளிப்பாள்
காதல் கொண்டு காவல் காப்பாள்
கண்ணைக் கொண்டு கடலை அளப்பாள்
காமம் கொண்டு மோகம் வளர்ப்பாள்
வேகம் கொண்டு தாகம் தணிப்பாள்
தோழி என்று துவங்குவாள்
ஆழிப் பேரலையாய் விழுங்குவாள் காதலி

மனைவி என்று
மாற்று வேடம்
துணைவி என்று
நிழல் போல் தொடர்ந்து
கணவனுக்கு காத்து நின்று
கடமை கொண்டு காத்து நின்று
கருணைக் கடல் வென்று
கரை சேர்ப்பாள்
கறை இல்லா
உரை செய்து
உள்ளம் மகிழ வைப்பாள்
விடுப்பில்லா வேலை செய்து
விளங்க வைப்பாள்
அடுப்பில் வெந்து
சுகம் மறந்து
பசிச் சுமை குறைப்பாள்
தியாகம் என்னும் யாகம் செய்து
தரணி வாழ தானும் வாழ்வாள்
கற்பை தனக்குள் வைத்து
கருப்பை காப்பாள்
குடும்பம் என்னும் அரங்கம் ஏறி
குழப்பம் இன்றி பழக்கம் கற்று
ஒழுக்கம் உணர்ந்து பாத்திரம் அறிந்து
படுக்கை படர்ந்து
பத்தினி என்று உத்தமியானள்

பழி சொன்னால்
விழி துடைப்பாள்
மொழியின்றி வழி செய்வாள்
பாச வேலியிட்டு
குழந்தைப் பயிர் வளர்ப்பாள்
உயிர் ஊட்டி
உறங்க வைப்பாள்
அழகின் அர்த்தம்
அகராதியில் உள்ளது
அவளின் பெயர் கொண்டு
உயிர் வளர்க்கும்
இயந்திரம் அல்ல அவள்
உள்ளம் உருக வைக்கும்
மந்திரம்
உலகம் சொல்ல
இல்லை சுதந்திரம்
முக்தி காண அவள் சக்தி வேண்டும்
முத்து குளிக்க அவள் பக்தி வேண்டும்
வேடம் ஏற்று
பாடம் புகட்டும்
புடம் போட்டத் தங்கம் அவள்.
அவள்தான் பெண்.

கடவுளின் கர்வம் - இயற்கை..

கால் போன போக்கில்
சுழலும் சக்கரம்
காலம் அதன் மந்திரம்
தடம் மாறாமல்
தடம் கொண்டு
ஓடிக் கொண்டிருக்கும்
நிற்காமல் அளவில்லா எல்லை
தடுப்புச் சுவரில்லை
காவல் காக்கும் வேலை இல்லை
எண்ணிலடங்கா கோள் குடும்பங்கள்
ஒளி உமிழும் வின்மீன்கள்
ஒவ்வொரு கூட்டுக் குடும்பமும்
தனிக்குடித்தனம் செய்கின்றன.

நெருப்பு பந்தை
உருளச் செய்தான்
அதன் ஒளியை
பிரபஞ்சத்தில்
படரவிட்டான்
உருவம் இல்லை
உள்ளம் இல்லை
உறக்கம் இல்லை
உடுப்பும் இல்லை

சதையுடன் எலும்புடன்
செந்நிற குருதி கலந்து
சிலவற்றை ஊரவிட்டான்
சிலவற்றை பறக்கவிட்டான்
சிலவற்றை நடக்கவிட்டான்
சிலவற்றை நீந்தவிட்டான்

ஆதியும் இன்றி
அந்தமும் இன்றி
அலைவான் அவன்
உழைக்க வேண்டாம்
ஊதியம் வேண்டான்
ஆனால் பிழைக்க தெரியும்
ஆக்க தெரியும்
காக்க தெரியும்
அழிக்கவும் தெரியும்
நீர் வைத்து
நிலமும் வைத்து
அதில் வான் வைத்து
வலியும் வைத்தான்

காற்று தந்து
தூசும் தந்து
மாசில்லா மரமும் தந்து
மண்ணை படைத்து
பொன்னைப் படைத்து
மனமும் வைத்தான்
மனதில் ஆசை வைத்தான்
பாசம் வைத்தான்
வேஷம் வைத்தான்
மகிழ்ச்சி வைத்தான்
சூழ்ச்சி வைத்தான்
அத்தனைக்கும்
அளவை வைக்க மறந்தான்
இயற்கை அழகை படைத்தான்
ரசனை உணர்வுடன்
ரசிக்க சொன்னான்.

உணவை வைத்து
அதில் சுவையை கலந்து
புசிக்க சொன்னான்
வாழ்கை தந்து
வாழச் சொன்னான்
அதில் பாடம் கற்று
படிக்கச் சொன்னான்
பழகச் சொன்னான்
மொழி வைத்து
நிறம் வைத்து
மனம் வைத்து
மக்களை பிரித்தான்
ஆட்டம் தொடங்கி
நோட்டம் பார்த்தான்
ஆட்டம் போட்டவனை
அடங்க செய்தான்
பாசம் கொடுத்து
பிரிவைக் கொடுத்தான்
பண்பைச் சொல்லி
அன்பை தந்தான்

கஷ்டம் கொடுத்து
கருணைக் காட்டினான்
ஆயிரம் கை உண்டு
கோடி வேலை உண்டு
பாயிரம் பாட வைப்பான்
பக்தர்கள் வேண்டி நிற்பர்
பாமரர் பாடி தொழுவர்
வற்றாத அருள் உண்டு
குறையாத பொருள் உண்டு
குன்றாத குணம் உண்டு
மங்காத மனம் உண்டு
மாயம் பல உண்டு
மெய் என்பான்
பொய் உரையான்
வையகம் வாழ வைத்து
வாழ்ந்து வாழ்த்துவான்.

Wednesday, July 11, 2007

மௌனம்

மௌன மொழி இறைவன் மொழி
வர்ணம் இல்லா சித்திரம் மௌனம்
வார்த்தை கொட்ட ஆயிரம் வழி உண்டு
ஒலியின் வலி உணர்ந்தவர் பலருண்டு
மௌன மொழி கேட்பவர் சிலருண்டு
மௌனத்தின் ஒலி மனதை வருடும்
சாந்தத்தின் நிழல் உள்ளத்தில் படரும்
பேசா நோன்பு வாழ்வின் மாண்பு
காந்தியின் ஆயுதம் மௌனப் போராட்டம்
அதுவே நம் நாட்டின் சுதந்திரத் தேரோட்டம்
ஆயிரம் வாளின் கூர்மை ஓர் மௌனத்தின் பதில்
எல்லா மலரின் மணம் தெரியாது
சொல்லா மௌனம் குணம் தெரியாது
மௌனக் கணை தொடுத்தால்
இறைவன் துணை நின்று நம்மை காப்பான்
வார்த்தைகளின் வடிவறியா மொழி மௌனம்
வாழ்வின் வழி அறியவைக்கும் மொழி மௌனம்
மௌனத்தின் அலை உள்ளத்தில் அடித்தால்
உறங்கும் கலை விலை பெரும்
உலகம் வியக்கும் சிந்தனை உயிர் பெரும்
காதலை கனியவைக்கும் மொழி மௌனம்
அதுவே காதலர்கள் கானம்.

மௌனத்தினால் வருவது மன அமைதி
கோபத்தின் கரம் குணத்தை அழிக்கும்
மௌனத்தின் ஈரம் மனதை வளர்க்கும்
ஊமையின் குரல் மௌனத்தின் பாடல்
பேரலையில் ஓடும் ஓடம் கடினப் பயணம்
அலையில்லா ஆழ் கடல் அமைதிப் பயணம்

மௌன ஊற்று
பகைமைக்கு வறட்சி
நட்பின் வளர்ச்சி
மௌனத்தில் மயங்கும் மனம்
சிகரம் தொடும் வானம்.

மௌன மணம் பரப்பும் மனம்
இறைவன் வசிக்கும் இடம்
ஒலி வெள்ளத்தில் உறங்கா விழிகள்
மௌனப் படுக்கையில் மயங்க துடிக்கும்
மௌனத்தின் மறுபெயர் அமைதி
அமைதி தேடி அலைபவர் கோடி
உண்மை காண செல்வார் இறைவனை நாடி
மௌனச் சிந்தனை அழிக்கும் நம் வினை
மௌனத்தில் அமைதி நாடி தொடரும் கடவுள் துணை
துயர் கண்ட நெஞ்சம் துயில் கொள்ள
ஆரவாரம் இல்லாமல் அமைதிகான
கவலைக் கொண்ட மனது

கட்டுண்ட காளையாய்
கோப வெறியை அடக்க
அன்பின் உறைவிடம்
இறைவன் இருப்பிடம்
பிரபஞ்சத்தின் பேரின்பம் உணர
பிழை களைந்து மன நிம்மதி காண
ஆரோக்கிய வாழ்வு வாழ
மௌனத்தை கடைபிடிக்க
வேண்டிய இடத்தில கடைபிடித்து
காண்போம் மகிழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி.

Friday, July 6, 2007

பாரதியார் கவிதை

மனதில் உறுதி வேண்டும்
<<*மகாகவி சுப்பிரமணிய பாரதியார்*>>
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென் பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம்! ஓம்! ஓம்! ஓம்!

 
software software